காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மணிகண்டன் தற்போது கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோருடன் இணைந்து 85 வயதான நல்லாண்டி என்ற விவசாயியும் இணைந்து நடித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்த்த சிலர் இப்படத்தினை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தப் படம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்றும், பஞ்ச் டயலாக்குகள், விவசாயத்தை அழிக்கும் ரசாயன தொழிற்சாலைகள், ஹீரோவை அளிக்கும் கார்ப்பரேட் வில்லன் போன்ற எந்த சமாச்சாரமும் இந்த திரைப்படத்தில் இல்லை.
இது முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் உண்மையான விவசாயியின் வலியை தத்ரூபமாக காட்டியுள்ளதாக பலரும் புகழ்ந்து வருகின்றனர். அதிலும் நல்லாண்டியாக வாழ்ந்து உள்ள அந்த பெரியவர் அனைவரின் மனதையும் தொட்டு விட்டார் என்று அவருக்கு சிறப்பான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மண்ணையும் விவசாயத்தையும் காப்பாற்றுவது நம் கடமை என்ற கருத்தை ஆணித்தரமாக சொன்னதன் மூலம் மணிகண்டன் மீண்டும் ஒரு முறை தன்னை நிரூபித்துள்ளார். இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாயத்தைப் பற்றிய ஒரு அற்புதமான திரைப்படம் வெளி வந்துள்ளது என்றும், இந்த திரைப்படம் கண்டிப்பாக தேசிய விருது பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பலவிதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார்.
அதிலும் யோகி பாபு உடன் இணைந்துள்ள இந்தக் கூட்டணி ரசிகர்களை நிச்சயம் கவரும். அந்த விதத்தில் கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் இந்த திரைப்படத்தினை பாராட்டி வருகின்றனர்.