புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திராவிட அரசியலுக்கு முன் விஜய் கட்சி நிலைக்குமா? ஆட்சியை பிடிக்க ஒரு மகத்தான வழி இதோ!

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு ஆச்சர்யம் தமிழக அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

அதுதான் திராவிட அரசியல்.

பெரியார் குருகுலத்தில் இருந்து அரசியல் கற்று வந்த பேரறிஞர் அண்ணா, வி நாயகர் சிலையையும் உடைக்க மாட்டேன், விநாயகருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன் என்று கூறி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வார்த்தையைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

பெரியாருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கியபோது, அண்ணாவுக்கு அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், அஞ்சா நெஞ்சர் அழகிரி, மு.கருணாநிதி உள்ளிட்ட இளவல்களின் ஆதர்சமான அன்பும், பற்றும் அண்ணாவின் மீதும் அவர் தொடங்கிய கட்சியின் மீதும் அவரது ஆழமான விரிந்த அறிவின் மீது, இந்தியாவிற்கும் தமிழ் நாட்டு அரசியலை எப்படி நகர்த்த வேண்டுமென புரிதலின் மீதும் இருந்தது.

இது காலவோட்டத்தினால் இன்றளவும் மாறவில்லை. தமிழ் நாட்டிற்கு முதல்வர்கள் திராவிட கட்சிகளில் இருந்துதான் இன்றுவரை மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

திராவிட கடிகளான திமுகவும், அதிமுகவும்தான் மாறிமாறி ஆட்சிப் பீடத்தை அலங்கரிக்கிறார்கள்.

ஆனால் திமுகவை அண்ணா தொடங்குவதற்கு முன்பே, ராஜாஜி, பக்வத்சலம் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருந்தனர்.

அக்கட்சி பாரம்பரியமான இருந்தாலும், திராவிட கட்சிகளின் எழுச்சியினாலும், அண்ணாவின் பேரறிவினால் எழுப்பிய திராவிட பிம்பத்தாலும், இன்றளவும் திராவிட கட்சிகளின் தயவில்தான் காங்கிரஸும் ஏனைய கட்சிகளும் தமிழ் நாட்டில் அரசியல் செய்து வருகின்றன.

பாரம்பரிய கட்சிக்கே இந்த நிலை என்றால், நடிகர்களின் கட்சி எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி சாமானியர்களுக்கே எழுவதைக் காண முடிகிறது.

சமூக வலைதளங்களில் இது ஒரு கேள்வியாகவும் விவாதமாகவும் முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தன் லெட்டர் பேடில் அறிவித்தார். சமீபத்தில் இதன் கொடியையும் கொடிப்பாடலையும் அறிமுகம் செய்தார்.

கட்சியை டிவிகே என்று அறிமுகம் செய்த அன்றே தமிழக வாழ்வுரிமைக் கட்சி விஜய் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடியைத் தூக்கியது. அண்மையில் தவெக கொடியை அறிமுகம் செய்த அன்றே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் அக்கட்சியினரும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கெல்லாம் பதிலே அளிக்கவில்லை தவெகவும் அக்கட்சியின் தலைவர் விஜய்யும்.

இதுவொருபுரம் இருக்க, சமீபத்தில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாமல், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறி, பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதுவும் பேசுபொருளானது.

பாஜக கடுமையான விஜய்யை விமர்சித்து, திமுகவையும், திராவிட அரசியலை அவர் பின் தொடர்கிறார் என்று கூறியது.

எனவே திராவிட அரசியல், பெரியார் அண்ணாவை பின்தொடராமல் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதை புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆனால், நடிகர் விஜய் இந்த அரசியலுக்கு முன் தாக்குப் பிடிப்பாரா என்பதுதான் கேள்வி.

ஏனென்றால் சினிமாவில் புரட்சிக் கருத்துகள் பேசுபவர், தன் பாடல்களில் ரசிகர்கள் குதூகளிக்க வேண்டும் என்பதற்காக, சிகரெட், மது போதை வஸ்துகளைக் காட்டுவதாக, அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி குற்றம்சாட்டி, புகார் அளித்தபோது, அதற்கு எந்தப் பதிலும் விஜய் தரப்பில் அளிக்கவில்லை.
அவரைப் பற்றிய விமர்சனத்திற்கும் அரசியல் வருகைக்குப் பின் முன்வைக்கப்பட்ட அந்த விநாயகர் சதுர்த்திற்க்கு ஏன் வாழ்த்தில்லை என்பதற்கும் பதிலில்லை.

தி கோட் படத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதாக பலர் கூறியதற்கும் அவர் எதுவும் கூறவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அவரது கொள்கையாக லெட்டர் பேடில் பொறிக்கப்பட்டிருந்தது.

இதுதவிர அவரது கொள்கைகள், கோட்பாடுகள் என்னென்ன என்பதை முதல் மா நாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், சிவாஜி, பாக்கியராஜ், கார்த்திக்,டி ராஜேந்தர், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கிய கட்சியைப் போன்று விஜய் கட்சியும் காணாமல் போகும் என்று கருத்துக் கூறியிருந்தார்.

இதைத்தாண்டி,சினிமாவிலும், ஆடியோ விழா மேடைகளிலும், கல்வி விழாவிலும், ரசிகர்கள் மத்திலும் மட்டுமே பேசி வந்த விஜய். இனிமேல் பொதுமக்கள் முன்னிலையில் அரசியல் பேச வேண்டும்.

திராவிட அரசியலையொட்டி அவர் அரசியல் செய்வாரா? இல்லை திராவிட கட்சிகளை படங்களின் வசனங்களைப் போல சீண்டி ரசிகர்களை உசுப்பேற்றி அரசியல் செய்வாரா? என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாகவுள்ளது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போன்று. சமீபத்தில் ஆந்திராவில் பவன் கல்யாண் துணைமுதல்வரானார்.

இதுபோல் விஜய் தனக்கென தனியிடம் மக்கள் மத்தியில் பிடிப்பாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட அரசியல் பாணியைப் பின்பற்றுவார் எனில், பாஜக உள்ளிட்ட கட்சிகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பது விஜய்க்கும் நன்கு தெரியும்!

ஆனால் அந்த அரசியலைத்தான். அந்த திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் புதியக் கட்சி தொடங்கி வரும் 2026 ஆம் ஆண்டு முதல்வர் ஆகும் கனவிலும் இருக்கிறார்!

அந்த கனவு பலிக்க அவர் இந்த குறைந்த நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பிரசாந்த் கிஷோர் மாதிரி அரசியல் ஆலோசகர்களை நியமித்து ஆலோசனை கேட்பாரா? இல்லை நேரடியாக வீதியில் இறங்கி மக்களின் மனதில் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள முற்படுவாரா? என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

ஆனால், புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் ஆம் ஆத்மி கெஜ்ரிவாலைப் போல குறுகிய காலத்தில் ஆட்சியையும் பிடிக்க வாய்ப்புள்ளது. அதற்கு அவரது திட்டங்கள் என்ன? மக்கள் மனதை எப்படி வெல்லப் போகிறார்? இலவசங்களை சர்க்கார் படத்தில் வெளுத்து வாங்கிய அவர் மக்களை கவர என்ன வாக்குறுதிகள் வைத்திருக்கிறார்? அவரது சினிமா மையம் கொண்ட கட்சி நிர்வாகிகளை மக்கள் ஏற்பார்களா? அரசியல் முதிர்சியை ஸ்கிரிப்ட் மாதிரி இல்லாமல் ஆழ்ந்த அனுபவத்தில் இருந்து தனது பேச்சை விஜய் மைக்கில் இறக்குவாரா? என்பதெல்லாம் தற்போது அவர் முன்னிருப்பவையாகும்.

இதற்கெல்லாம் விஜய் பதில் சொல்லி, செயலில் தன்னை நிரூபித்தால் காங்கிரஸை ஓரம்படி டெல்லியில் ஆட்சியைப் பிடித்த கெஜ்ரிவால் மாதிரி விஜய்யும் தனித்து ஜெயிக்க கூடும்!

இல்லையென்றால் தமிழ் நாட்டில் மற்ற நடிகர்களின் அரசியல் கட்சி மாதிரி இனிமேல் லெட்டர் பேடில் மட்டுமே கட்சி நடத்த நேரிடும் என்று மக்கள் அவருக்கு பாடம் கற்பிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Trending News