விஜய் சேதுபதி பல வருடங்கள் துணை நடிகராகவும், சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இடத்தை உருவாக்கி இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்திருக்கிறார்.
அதனால்தான் அவருடைய மகன் சூர்யாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியபோது இயல்பாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பீனிக்ஸ் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ஒரு புதுமுக ஹீரோவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருவது சினிமாவில் புதிதல்ல.
ஆனால் விஜய் சேதுபதியின் மகன் பொதுவெளியில் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்ற புதுமுகங்களை விட அதிகமாக கவனிக்கப்படும். ஒரு சாதாரண புதுமுகம் செய்யும் தவறு ஒரே நாளில் மறந்து விடும். ஆனால் ஒரு பிரபலத்தின் மகன் செய்தால் அது தவறாக வேற மாதிரி பேசப்படும்.
விஜய்சேதுபதி மகன் சூர்யா வேண்டும் என்றே பொதுவெளியில் எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் அவருடைய எதார்த்தமான நடவடிக்கை சில பொறாமை பிடித்தவர்களால் திரித்து தவறாக பரப்பப்பட்டது.
சில இயக்குநர்கள் அவரை அணுகினாலும், ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல கதாபாத்திரம் அமைந்தாலும் சரி என்று இருக்கிறார். ஒரு நடிகரின் மகனுக்கு வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருக்கலாம்; ஆனால் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது அவருடைய சொந்த திறமையில்தான் இருக்கிறது.
விஜய் சேதுபதி தனது வாழ்க்கையில் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து தனக்கான இடத்தை உருவாக்கியவர். அவருடைய மகனுக்கு அந்த பாதை தேவையில்லை. ஆனால் அதே நேரத்தில், அப்பாவின் பெயர் மட்டும் நீண்ட காலத்திற்கு அவரை சினிமாவில் நிறுத்தாது.
ஒரு விஷயம் மட்டும் உண்மை. நான்கு சுவர்களுக்குள் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் பொதுவெளியில் ஒரு பிரபலத்தின் மகன் என்ற அடையாளம் இருக்கும்போது, தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கொஞ்சம் கவனமாக கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.




