ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

போலீஸ் வாழ்க்கையை தோலுரித்த டாணாக்காரன் திரைவிமர்சனம்.. விக்ரம் பிரபு ஜெயிப்பாரா.?

விக்ரம் பிரபு பல வருடங்கள் நடித்தும் இவருக்கென்று ஒரு வெற்றி படம் அமையாமல் காத்துக்கொண்டிருந்தார். அதற்கு பலனாக அவர் நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்துள்ளது இந்த டாணாக்காரன். படம் எதார்த்தமாக தொடங்குகிறது, படத்தின் கதை என்று சொன்னால் எளிதான ஒரு கதை அனைவராலும் அறியப்பட்ட கதை.

அணிவகுப்பு காவலர்கள் பயிற்சி பட்டறை மையப்படுத்தி இங்கு நடக்கும் சில அவலங்களை அழகாக எளிமையாக குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் தமிழ். போலீஸ் பயிற்சி விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த கதை ஆரம்பித்து முடித்து உள்ளார். காவலர்கள் பயிற்சி இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று இந்த படத்தின் மூலம் உணரப்படுகிறது. சாதாரண மனிதன் போலீசாக ஆவது எவ்வளவு கடுமையான விஷயம் என்பதை இந்தப்படம் தெரியப்படுத்தி உள்ளது.

விக்ரம் பிரபு சிறுவயதிலிருந்தே போலீசாக வேண்டும் என்று கனவில் பயிற்சி பட்டறைக்கு வருகிறார். அங்கு வந்து சேரும் பலர் ஒன்றுகூடி நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு உயர் அதிகாரிகள் பயிற்சிக்கு வரும் காவலர்களை கொடுமைப்படுத்துவது, அடிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்கள் நடந்தவண்ணம் உள்ளன. இதனை தட்டி கேட்டால் அவர்கள் போலீசாக முடியாது இல்லை தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்கள்.

இதனை மிகவும் யோசித்து விக்ரம் பிரபு தட்டிக்கேட்கும் ஒவ்வொரு காட்சியும் எதார்த்தமாக அனைவரும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. விக்ரம் பிரபு இந்த கதைக்கு மிக அழகாக பொருந்துகிறார் மிக அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லால் மிரட்டலாக படத்தில் முழு பகுதியும் ஆக்கிரமித்து உள்ளார்.

விக்ரம் பிரபு நண்பர்களாக வரும் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை அருமையாக எதார்த்தமாக அமைந்துள்ளது. எம்எஸ் பாஸ்கர் இந்த படம் மிக முக்கிய திரைப்படமாக அவருக்கு அமைந்து உள்ளது. நிறைய இடைவெளிக்குப்பிறகு எம்எஸ் பாஸ்கர் நடிப்பு இத்திரைப்படத்தில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஹீரோயின் படத்தில் தேவையில்லை என்றாலும் மிக அழகாக பொருந்தி உள்ளார். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி நிமிடம் வரை ரசிகர்களின் நாடித்துடிப்பை மனநிலையை அறிந்து அழகாக படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் உதவியாளர் என்று மட்டுமே தெரியும் ஆனால் இவர் அசுரன் மற்றும் ஜெய்பீம் படங்களில் வில்லனாக நடித்த அனைவராலும் அறியப்பட்ட ஒரு முகம்.

இந்த எதார்த்தமான திரைப்படத்தை இவர் வழங்கி உள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இன்னும் பல பாராட்டுகளைப் பெற்று இருந்திருக்கும். இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய முக்கிய திரைப்படம். ரொம்ப வருடங்களுக்கு பின் விக்ரம் பிரபுவுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங் – 3.5 / 5

- Advertisement -spot_img

Trending News