ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தமிழ் இயக்கியுள்ள படம் தான் டாணாகாரன். இப்படத்தில் விக்ரம் பிரபு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த விக்ரம்பிரபு அடுத்தடுத்த படங்களில் சற்று தடுமாறினார்.
தற்போது விக்ரம் பிரபு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து டாணாக்காரன் படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இப்படம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படம் 1997 ஆம் ஆண்டு போலீஸ் ட்ரெய்னிங்கில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. டாணாகாரன் படத்தில் போலீஸ் பயிற்சிக் கூடங்களில் நடக்கும் அநீதிகளை எடுத்துரைக்கிறது. யாரும் இதுவரை கேட்டிடாத புதிய பரிமாணத்தில் இப்படம் இருந்தது.
மேலும் இதில் பல போராட்டங்களைத் தாண்டி விக்ரம் பிரபு எப்படி போலீஸ் அதிகாரியாக ஆகிறார் என்பதே டாணாகாரன் படத்தின் கதை. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்துள்ளார் விக்ரம் பிரபு. ஆனால் விக்ரம் பிரபு மற்றும் அஞ்சலி நாயர் இடையேயான காதல் காட்சிகள் பெரிய அளவில் சுவாரசியம் இல்லாமல் இருந்தது.
இப்படத்தின் முதல்பாதி பயிற்சிக் கூடங்களில் நடக்கும் அநீதிகளும், இரண்டாம் பாதி ஹீரோ மற்றும் வில்லன் இடையே ஆன மோதல்களுமாக இருந்தது. இப்படத்தில் லிவிங்ஸ்டன் சில காட்சிகளில் மட்டுமே வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், டாணாகாரன் படம் முழுக்க பள்ளி மைதானத்தை மட்டுமே காண்பிக்கப் பட்டாலும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் மதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் இரண்டே பாடல்கள்தான். அதுவும் பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டி இருந்தார்.
முதல் பாதி விருவிருப்பாக சென்றாலும் அடுத்த பாதி அனைவராலும் கணிக்க முடியும் அளவுக்கு இருந்தது. மேலும், 150 வருஷமா சட்டையே மாத்தாத டிபார்ட்மென்ட்ட மாத்தப்போறேனு வந்து நிக்குற என்ற விக்ரம் பிரபுவின் வசனம் மனதில் நிற்கிறது.