2010ஆம் ஆண்டிற்கு முன் நாம் படங்களின் 50 ஆம் நாள், 100ஆம் நாள் படங்களின் விளம்பரங்களை செய்திதாள்களிலும், போஸ்டர்களிலும் காண முடிந்தது. இதனை வைத்தே ஒரு படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அப்போது கணக்கிட்டு வந்தனர். 2010ற்கு பிறகு டிஜிட்டல் உலகின் வளர்ச்சியால் படங்களை ஆன்லைனில் வெளியான ஒரு சில மணி நேரங்களில் பதிவிட்டு விடுகின்றனர். இப்பொழுது வெளியாகும் படங்களை இது பெரிதும் பாதித்துள்ளது.
சென்ற வாரம் ஓடிடியில் வெளியான படம் டாணாக்காரன். விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்த விக்ரம் பிரபுவின் ஏக்கத்தை இந்த படம் தீர்த்து உள்ளது.
பலரும் இந்தப்படத்தை பாராட்டி சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. படத்தை பாராட்டி அனைவரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் சூழலில் இந்த படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் விக்ரம் பிரபுவை பாராட்டி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த நெட்டிசன் இந்தப்படத்தை வெளியான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்காமல் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கள்ளத்தனமாக பார்த்துள்ளார். அதனை மறந்து பாராட்டும் எண்ணத்தில் அப்படியே டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை விக்ரம் பிரபுவும் கவனிக்காமல் அப்படியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவிலுள்ள அந்த லிங்க் பெயரை கண்ட நெட்டிசன்கள் அந்த லிங்கின் பெயரை வட்டமிட்டு காட்டி ரீடிவிட் செய்து வருகின்றனர். மேலும் பலர் மறைமுகமாக விக்ரம் பிரபுவும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களை ஆதரிக்கிறாரா? என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப்படம் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டியுள்ளது. பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது இந்தப்படம். படம் மட்டுமின்றி இப்போது விக்ரம் பிரபுவின் டிவிட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.