செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆரம்பத்திலிருந்தே தாஜா பண்ணும் நடிகர்.. இன்னும் பச்சைக்கொடி காட்டாமல் தவிக்கவிடும் மணிரத்னம்

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலியின் உருவாக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ராணா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்தப் படம் இந்திய சினிமாவின் ஒரு சரித்திரமாக மாறியது.

இந்த படத்திற்காக நடிகர் பிரபாஸ் பல கடுமையான பயிற்சிகளை கற்று நடித்தார். இதன்மூலம் தெலுங்கில் பிரபல நடிகராக இருந்த அவர் தற்போது இந்திய அளவில் அனைவருக்கும் பரிச்சயமான, மிகவும் பிடித்த ஒரு நடிகராக மாறியிருக்கிறார்.

தற்போது இவரின் நடிப்பில் ராதே ஷ்யாம் என்ற திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பிரபாஸ் தற்போது சென்னை வந்திருக்கிறார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பிரபாஸிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் மிகவும் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அப்போது அவருக்கு பிடித்த இயக்குனர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபாஸ் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் இயக்குனர் மணிரத்னம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான கீதாஞ்சலி திரைப்படம் அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் நடிப்பதற்கும் அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை பல வருடங்களுக்கு முன்பே அவரிடம் தெரிவித்ததாகவும், இன்னும் அவரிடம் இருந்து கிரீன் சிக்னல் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கூடிய விரைவில் அவருக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News