வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தை ஏன் தயாரித்தேன் என்பது பற்றி கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவாவின் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். இப்படத்தில் சிவா மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற உண்மை கேரக்டரில் சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கெளரவ் வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாக கொண்டு, சிவ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத்தின் தொடர் தழுவல் என்று கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸுடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இப்படத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது.

சிவாவின் கேரியரில் பெரிய பட்ஜெட் படமென்பதால் பெரிய எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இப்படத்தின் போஸ்டர், டீசர், ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவந்தன. வரும் அக்டோபர் 31 ஆம்தேதி தீபாவளியையொட்டி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. எனவே மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்பட புரமொசன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் ரங்கூன் படத்தை அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவா நடிப்பில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ள அமரன் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்தது ஏன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது;

நாங்கள் தயாரித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப் புனல், சத்யா அந்த வரிசையில் இதைச் சொல்ல முடியாது. இதெல்லாம் புனை கதைகள் ஆகும். ஆனால் அமரன் படம் அப்படியில்லை. இது நமக்கான நிகழ்ந்தது. இது நிஜம். இப்படத்தின் கதை ஏன் இப்படியானது என்று கேள்வி எழுப்ப முடியாது.

முகுந்தனுக்கு இணையான வீரம் அவரது வீட்டிலும் இருக்க வேண்டும். அவரது கதையும் இப்படத்தில் உள்ளது. எல்லா தாய்மார்களுக்கும் புரியும். எல்லா மனிதர்களுக்கும் புரியும். அதனால் இது வித்தியாசமான கதை. இப்படத்தின் கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்பதைவிட நிகழ்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

சிவாயின் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை விட இது வித்தியாசமான கதைக்களம் என்பதால் இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். உலகம் முழுவதும் வெளியாகும் இப்படமும் நிச்சயம் முதல் நாள் வசூல் மட்டுமின்றி இண்டஸ்ட்ரியிலும் பெரிய சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. அதற்காகத்தான் விக்ரம் படம் போல கமல் இப்படத்தையும் புரமோசன் செய்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Trending News