செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

கே ஜி எஃப் 2 படத்திற்கு கிடைத்த வரவேற்பு .. விமர்சனங்களை அள்ளி வீசிய பிரபலம்

யாஷின் கேஜிஎப் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் பல திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்சார் போர்டு உறுப்பினரான உமர் சந்த் என்பவர் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு, நடிகர் யாஷ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீசான கேஜிஎப் திரைப்படம் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இத்திரைப்படம் வெளியாகும் வரை கன்னட திரையுலகில் மட்டுமே நடிகர் யாஷ் பிரபலமானவர். ஆனால் இத்திரைப்படத்திற்கு பின்னால் இந்திய அளவில் பெரும் அளவில் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்து வருகிறார். மூன்று வருட காலம் படப்பிடிப்பிற்கு பின் தற்போது கே ஜி எஃப் 2 திரைப்படம் பல மொழிகளில் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் காண முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 திரைப்படங்களை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் துபாய் சென்சார் போர்டின் உறுப்பினரான உமர் சந்த் என்பவர் கே ஜி எஃப் 2 திரைப்படத்தை பார்த்து விமர்சனங்களை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் கேஜிஎப் திரைப்படம் வெறும் கன்னடம், இந்திய திரைப்படம் மட்டுமல்ல இது உலகத் தரத்திலான திரைப்படம். இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய நடிப்பு திறமையை அருமையாக வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கும் நிலையில், இப்படத்தின் பின்னணி இசை பிரம்மாண்டமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கே ஜி எஃப் 2 தொடங்கியதிலிருந்து முடியும் வரை சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த காட்சிகள் உள்ளது எனவும் உமர் சந்த் தெரிவித்துள்ளார். நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வேற லெவலில் நடித்துள்ளார் என்றும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் புல்லரிக்கும் விதமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் மிக அருமையாக இப்படத்தை எடுத்துள்ளார், என்றும் உமர் சந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்சார் போர்ட் நிறுவனரின் இந்த பதிவு கேஜிஎஃப் திரைப்படத்தின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் அப்டேட்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது இது மேலும் புத்துணர்ச்சி ஊட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News