புதன்கிழமை, நவம்பர் 27, 2024

ஒருத்தர ஏமாத்தனும்னா ஆசையத் தூண்டனும்.. சதுரங்க வேட்டை பட பாணியில் பல கோடி மோசடி செய்த ஜோடி

ஆசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. ஒருத்தர ஏமாத்தனும்னா ஆசையத் தூண்டனும் அப்டீனு சதுரங்க வேட்டை படத்துல ஒரு வசனம் வரும் அதேபோல உத்தரபிரதேசம் மாநிலத்தில் டைம் மெஷின் மூலம் முதியவர்களை இளமையாக்குவதகாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் என்ற பகுதியில் வசிப்பவர் ராஜீவ் குமார், இவரது மனைவி ரஷ்மி. இத்தம்பதிகள் சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் இருந்து Time Machine வரவழைத்ததாகக் கூறி இதன் மூலம் 60 வயதில் இருந்து 25 வயது இளமையை மீட்க முடியும் என்று ரிவிவல் வேர்ல்டு என்ற பெயரில் ஒரு சிகிச்சை மையத்தை திறந்தனர்.

இந்த மையத்திற்கு சிகிச்சை வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ஊர் முழுவதும் விளம்பரம் செய்தனர். அதில், கான்பூரில் அதிகளவு மாசுபாடு உள்ளதால்தான் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவதாகவும், இதற்குத் தீர்வாக இஸ்ரேலில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட டைம் மெஷின் மூலம் ஆக்சிஜன் தெரபியில் சிகிச்சை அளித்தால், இழந்த இளமையை பெற முடியும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி, 10 முறை சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் என்றும், தொடர்ந்து அங்கு சிகிச்சை எடுக்கும் நபர்களுக்கான விஷேச கட்டணமான ரூ.90 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். இளமையில் இருந்து முதுமைக்குத் திரும்புவது தான் இயற்கை என்றாலும், இவர்கள் அளிக்கும் சிகிச்சையில் முதுமையில் இருந்து மீண்டும் இளமைக்குத் திரும்பும் நப்பாசையில் முதியவர்கள் சிலர் இச்சிகிச்சை மையத்தில் பணம் கட்டியுள்ளனர்.

இங்கு சிகிச்சை பெறுவது மட்டுமின்றி, இந்த டைம் மெஷின் பற்றி மற்றவர்களுக்கு பரிந்துரை செய்பவர்களுக்கும் ஆஃபர் வழங்கப்படும் என்று வந்தவர்களை நம்பும்படி பேசி மூளைச் சலவையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஏமாற்றமடைந்தனர்.

அதன்பின்னர், அந்த சிகிச்சை மையத்தின் செயல்பாடுகள், அங்கிருப்பவர்களைப் பற்றி முதியவர்களுக்குச் சந்தேகம் வரவே அவர்கள் இதுகுறித்துக் கேட்டபோது தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து சிலர் போலீஸில் புகார் அளித்த நிலையில், உஷாரன தம்பதியர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிப்பதாகக் கூறி சுமார் 20 பேரிடம் இருந்து ரூ. 35 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகாரை பெற்ற போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான தம்பதி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாகரீகம் அடைந்து, அறிவியலில் உச்சமடைந்து, இணையதளம் வளர்த்துவிட்ட இக்காலத்திலும் இப்படி போலீயான வாக்குறுதி, சிகிச்சைகளை நம்பி மக்கள் போலியான நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றுவது இன்னும் தொடர்கதையாகி வருவது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News