புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடிப்பில் கமல் மிரட்டிய 5 கிளைமாக்ஸ் சீன்கள்.. கண் கலங்க வைத்த ‘அன்பே சிவம்’

5 Best Climax scenes from kamal movies: மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரிலீஸ் ஆனதிலிருந்து எந்த பக்கம் திரும்பினாலும் கமலஹாசனின் பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. அட! குணா படத்தின் ஒரு பாடலுக்கே இப்படி அவரை பேச ஆரம்பித்து விட்டார்களே, அவருடைய 60 ஆண்டு கால சினிமா பயணத்தின் மைல் கல்கள் தெரிந்து கொண்டால் இந்தியாவிலிருந்து புறப்பட்டு கமலுக்கு ஆஸ்கார் கொடுத்தே ஆக வேண்டும் என போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கமல் படங்களில் கொண்டாடப்பட வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது அவருடைய படங்களின் கிளைமாக்ஸ் சீன்கள். அப்படி ரசிகர்களை கலங்கடித்த 5 கமல் படங்களின் கிளைமாக்ஸ் சீன்களை பற்றி பார்க்கலாம்.

தேவர் மகன்: தேவர் மகன் படத்தின் கிளைமாக்ஸ் இன்று வரை தமிழ் சினிமாவில் ட்ரெண்டான ஒரு விஷயம். கிராமத்து வாழ்க்கையை வேண்டாம் என மாடனாக வாழ நினைக்கும் பெரிய தேவரின் மகன் சக்தி அப்பாவின் மறைவுக்குப் பிறகு அந்த கிராமத்துக்கு சின்ன தேவராக மாறுவார்.

கிளைமாக்ஸ் காட்சியில் அவர் செய்த கொலை குற்றத்திற்காக இன்னொருவர் நான் இந்த பழியை ஏத்துக்கிற என்று சொல்லும்போது, போதும் இந்த ரத்த வாட, இதோட நிறுத்திக்கோங்க, போய் புள்ள குட்டி படிக்க வைங்க என பேசிவிட்டு ஜெயிலுக்கு போவது போல் அமைக்கப்பட்ட அந்த கிளைமாக்ஸ் பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

மூன்றாம் பிறை: கமல் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த படங்களில் மூன்றாம் பிறை படத்திற்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் உண்டு. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை உருகி உருகி காதலிக்கும் சீனுவாக கமல் அந்த படத்தில் வாழ்ந்திருப்பார்.

கிளைமாக்ஸ் சீனில் விஜிக்கு மனநிலை சரியான பிறகு சீனு யார் என்றே அவருக்கு தெரியாது. அப்போது ரயிலில் உட்கார்ந்து இருக்கும் விஜிக்கு, தன்னை ஞாபகப்படுத்த முயற்சித்து கடைசியில் பித்து பிடித்து போய் நிற்கும் சீனு படம் பார்ப்பவர்களை கலங்க வைத்திருப்பார்.

Also Read:உங்க பொழப்ப கெடுக்க மாட்டேன், பொழச்சி போங்க.. கமல் மறைத்த குணா ரகசியம், அம்பலப்படுத்திய பிரபலம்

நாயகன்: நாயகன் படம் ரிலீஸ் ஆகி 30 வருடங்கள் ஆகியும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெரிய அடையாளமாக இருக்கிறது. இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து பின் வேலு நாயக்கர் என்னும் பெரிய டானாக மாறி இருப்பார் கமல். ஒருவேளை நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் வேலு நாயக்கர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அந்த காட்சி ரசிகர்கள் மனதில் நின்றிருக்குமா என்று தெரியவில்லை.

வேலு நாயக்கர் செய்த முதல் கொலையான போலீஸ்காரரின் மகன் அவரை சுட்டுக் கொள்வது போல் அமைக்கப்பட்ட காட்சியும், அதன் பின்னணியில் ஒலிக்கும் தென்பாண்டி சீமையிலே பாடலும் நாயகன் படத்திற்கு கிரீடமாக அமைந்தது.

குணா: சமீபத்தில் ரிலீசான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தன்னுடைய நண்பனை குகையில் இருந்து தூக்கிக் கொண்டு வெளியில் வரும் பொழுது சரியான நேரத்தில் கண்மணி அன்போடு பாடலின் சரணம் ஒலிக்கும்.

உண்மையில் குணா படத்தில் தன்னுடைய கனவில் மட்டுமே காதலித்த பெண்ணின் உருவத்தை ஒத்த இன்னொரு பெண்ணின் மீது அதீத காதல், அவளை குகைக்குள் வைத்து பாதுகாப்பது என மனநிலை பாதிக்கப்பட்ட குணா காதலின் உச்சத்தை காட்டி இருப்பார்.

அதே நேரத்தில் வில்லனால் அபிராமி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவள் உடலை தூக்கிக் கொண்டு மலை மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளும் பொழுது ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ வரியின் உண்மையான ஆழம் புரியும்.

அன்பே சிவம்: வணிக ரீதியாக கொண்டாட தவறிய படம் தான் அன்பே சிவம். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படுகிறது.

ஒரு பக்கம் தன்னுடைய காதலியின் திருமணம் கண் முன்னே நடைபெறும் என தெரிந்து இருந்தும், மனம் மாறாத வில்லன் இந்த கல்யாணத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் ஊதிய உயர்வில் கையெழுத்து போடுகிறேன் என்று சொன்னதும் அதற்கு சரியென ஒப்புக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறும் கமல், பயப்படாதீங்க உங்க பொழப்பை கெடுக்க மாட்டேன் என சந்தான பாரதியிடம் சிரித்துவிட்டு சொல்லிவிட்டு செல்வார். அந்த காட்சி அவர் பின்னால் அவரை தொடரும் நாய், பின்னணியில் ஒலிக்கும் அன்பே சிவம் பாட்டு கண்களை கலங்க வைத்து விடும்.

Also Read:கமல் போட்ட விதை, மின்னல் வேகத்தில் வசூல் சாதனை.. மஞ்சுமல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Trending News