ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.. மிஸ்டர் வெர்சடைலாக மிரட்டிய 5 ஜாம்பவான்கள்!

தமிழ் சினிமாவின் 40-களில் இருந்து தற்போது வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி மிஸ்டர் வெர்சடைலாக மிளிரிய ஐந்து பிரபலங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

பி. எஸ். வீரப்பா: பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்து பெயர்போன பி.எஸ். வீரப்பா, மணிமேகலை என்ற படத்தில் முதல் முதலாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய உரத்த சத்தத்துடன் கூடிய பயங்கர சிரிப்பு அந்தக்கால ரசிகர்களிடையே மிகப் பிரபலமானது.

இதற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அதன்பிறகு இவர் நடித்த எல்லா படங்களிலும் இவருடைய சிரிப்பே இவருக்கு அடையாளமாக மாறியது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றோரிலிருந்து அதன்பிறகு வந்த முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

நம்பியார்: 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக திகழும் நடிகர் நம்பியார் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் எம்ஜிஆருக்கு வில்லனாக நம்பியார் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

வில்லனாக மட்டுமல்லாமல் கஞ்சன், கல்யாணி, நல்ல தங்கை ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நம்பியார் நடித்து கலக்கி இருப்பார். இருப்பினும் வில்லனாகவே இவரை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்காகவே எதிர்மறை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து மிரட்டினார். மேலும் இவர் பேசும் வசனங்கள் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு இருந்துள்ளது. காலம் கடந்து எத்தனையோ வில்லன்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தாலும், நம்பியாரின் வில்லத் தனத்தை மட்டும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை.

ரகுவரன்: தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரியவர் நடிகர் ரகுவரன். இவர் தமிழுக்கு 1982 ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

இருப்பினும் இவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படு வில்லனாகவே அடுத்தடுத்த படங்களில் வலம்வந்தார். மேலும் சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணசித்திர வேடங்களிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இப்படி ஆல்-ரவுண்டராக தமிழ் சினிமாவில் வலம் வந்த ரகுவரன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் உயிரிழந்தார்.

நாசர்: தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் நாசர் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த தேவர்மகன், படையப்பா, அவ்வை சண்முகி ,அன்பேசிவம் போன்ற படங்களில் வில்லன் குணச்சித்திர நடிகர் என வித்தியாச வித்தியாசமான கோணங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியவர். அத்துடன் நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

பிரகாஷ்ராஜ்: நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி மொழி படங்களில் தன்னுடைய பங்களிப்பை அளித்த நடிகர் பிரகாஷ்ராஜ் 2007-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற பெருமைக்குரியவர். இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் தந்தை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

இவ்வாறு மிஸ்டர் வெர்சடைலாக மிரட்டி இந்த 5 பிரபலங்களும் தமிழ் சினிமாவில் நடிப்பில் ஜாம்பவானாக திகழ்ந்து ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நடிப்பால் காட்டியிருக்கின்றனர்.