செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உடலுறுப்பு திருட்டை தத்ரூபமாக காட்டிய 5 படங்கள்.. விஜயகாந்தை மிரளவிட்ட சரத்குமார்

தமிழ் சினிமாவில் ஒரே கதையை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் உடலுறுப்பு திருட்டை மையமாக வைத்து வெளியான 5 படங்களை தற்போது பார்க்கலாம். இப்படத்தின் கரு ஒன்றாக இருந்தாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டிருந்தது.

காக்கி சட்டை : துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்கி சட்டை. இப்படத்தில் வடக்கில் இருந்து தமிழகம் வரும் கூலி தொழிலாளர்களை குறிவைத்து ஒரு கும்பல் கார்பன் மோனாக்சைடு கொடுத்து மூளைச்சாவு அடைய வைக்கின்றனர். அதன் பின்பு அவர்களின் உடலில் உள்ள உறுப்புகளை வெளிநாட்டுக்கு விற்கின்றனர். அதை எப்படி சிவகார்த்திகேயன் கான்ஸ்டபிளாக இருந்து தடுக்கிறார் என்பதே படத்தின் கதை.

என்னை அறிந்தால் : கௌதம் வாசுதேவ் மேனன், அஜித் கூட்டணியில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் சில வியாதிகள் உடனிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக, சில ஆட்களை கடத்தி அவர்கள் ரத்தம் முதல் இதயம் வரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் விற்கக்கூடிய கொடூர கும்பலை அஜித் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே என்னை அறிந்தால் படத்தின் கதை.

மெய் : என்னை அறிந்தால், காக்கி சட்டை படங்களை தொடர்ந்து மெடிக்கல் கிரைம் வரிசையில் வெளியான திரைப்படம் மெய். எஸ்ஏ பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் உடலுறுப்பு மாற்றத்தில் நடக்கும் குற்றங்கள் மற்றும் மருத்துவமனையில் நடக்கும் பித்தலாட்டங்களை வெளிச்சம் போட்டு காட்டிய படம்.

புலன் விசாரணை : ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் புலன்விசாரணை. இப்படத்தில் நோயாளிகளிடம் இருந்து சிறுநீரகங்களைப் திருடுவதை டிஜிபியாக இருக்கும் விஜயகாந்த் எவ்வாறு துப்பறிகிறார் என்பதே இப்படத்தின் கதை. மேலும் இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் இப்படத்தில் வில்லனாக சரத்குமார் விஜயகாந்தை மிரள விட்டிருந்தார்.

செய் : நகுல், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் செய். இப்படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மகனாக இருக்கும் நகுல், தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறார். அப்போது இறந்தவரின் உடலில் உறுப்புகள் திருடப்பட்டு இருப்பதை நகுல் துப்பறிகிறார்.

Trending News