Super Star Rajinikanth Movies: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்தாலே படம் ஹிட்டுதான் என இன்று வரை சினிமா உலகம் இருக்கிறது. இருந்தாலும் தலைவரின் ஒரு சில படங்களை இப்பொழுது பார்க்கும் பொழுது என்ன இதில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை, ரஜினி எப்படி இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றெல்லாம் யோசிக்கும் அளவிற்கு இருக்கும். அப்படிப்பட்ட ஐந்து படங்களை பார்க்கலாம்.
அன்புக்கு நான் அடிமை: ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை படத்தில் விஜயன் அவருக்கு அண்ணனாக இருப்பார். இருவரும் சிறுவயதிலேயே பிரிந்து விடுவார்கள். எதேர்ச்சையாக ஒரு இடத்தில் சந்திக்கும் பொழுது விஜயன் ரயிலிலிருந்து கீழே விழுந்து இறந்து விடுவார். அவருக்கு பதிலாக ரஜினி ஒரு கிராமத்திற்கு போலீசாக போவார். வீட்டில் விஜயன் இறந்ததை மறைக்கும் காட்சி மற்றும் அவருக்கு பதிலாக ரஜினி போலீசாக போனதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதது போல் காட்டிய காட்சி எல்லாம் லாஜிக் இல்லாமல் இருக்கும்.
மூன்று முகம்: ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் திரைப்படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. ஆனால் இதில் இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பியாக ரஜினி நடித்திருப்பார். ஒரு ரஜினி பணக்கார வீட்டில், இன்னொரு ரஜினி குப்பத்தில் என பிரிந்து வளர்க்கப்பட்டு, பின்னர் அலெக்ஸ்பாண்டியனை கொன்றவர்களை பழிவாங்கும் போன்ற காட்சிகள் எல்லாம் லாஜிக்கில் சொதப்பி இருக்கும்.
அதிசய பிறவி: அதிசய பிறவி படம் கொஞ்சம் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை சாயலில் இருக்கும். தைரியமான ரஜினி, எதற்கெடுத்தாலும் பயப்படும் ரஜினி என இரட்டை வேடம். இதில் தைரியமான ரஜினி இறந்துவிட, அவர் ஆயுசு முடிவதற்கு முன்பே தவறாக உயிரை எடுத்து விட்டதால் எமதர்மனே பூமிக்கு வந்து மற்றொரு ரஜினியின் உடம்பில் அவருடைய ஆவியை புகுத்துவது போல் கதை கொஞ்சம் ஓவராக இருக்கும்.
அலாவுதீனும் அற்புத விளக்கும்: ரஜினிகாந்த் மற்றும் கமல் இணைந்து நடித்த படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். ஆதி காலத்து விட்டலாச்சாரியார் கதை போல விளக்கை தேய்த்தால் பூதம் வரும் என்ற கான்செப்ட்டை மையமாகக் கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டது. படத்தின் மேஜிக் காட்சிகள் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
பாபா: ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய அடியாக அமைந்த படம் பாபா. பாபாவின் சீடரில் ஒருவர் மறுபிறவி எடுப்பது, உலகம் இதுதான் என தெரிந்து கொண்டு மீண்டும் ஆன்மீகத்திற்கு போவது என கதை ரொம்பவே லாஜிக் இல்லாமல் இருக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படம் ரஜினியின் கேரியரையே சோலி முடிக்க பார்த்தது.