வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இந்தக் கட்டுரையில் தமிழ் சினிமாவில் பள்ளிகளை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் சினிமா வரிசையை பார்க்கலாம். பழைய நினைவுகளை அசை போடுவதற்கு நம் மனது எப்போதும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் பள்ளியை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்டது சினிமாவை பார்க்கும் போது நமது பள்ளி காலத்திற்கே சென்றது போன்ற உணர்வு ஏற்படுவது வாடிக்கை.
துள்ளுவதோ இளமை: கஸ்தூரிராஜா இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் அவர்களது திரைக்கதையில், தனுஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆன படம் துள்ளுவதோ இளமை. இந்தப் படத்தில் அபினை, ஷெரின், ரமேஷ்கண்ணா உட்பட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா அமைத்த இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் சிறப்பு அந்த படத்தில் வரும் பள்ளி நாட்களும் அந்த பதின் பருவ விளையாட்டுக்கள் தான். நிச்சயம் ஒருமுறை பார்க்க வேண்டிய திரைப்படம். பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப் படத்தின் அப்பட்டமான தழுவல் என்பது பரவலான கருத்து.
ஆட்டோகிராப்: சேரன் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்த படம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மூன்று முக்கியமான காலகட்டத்தை காட்டுவதாக அமைந்தது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று இந்த மூன்று கால கட்டங்களிலும் அவரது வாழ்க்கையில் வரும் பெண்களை அழகாக காமித்து இருந்தார். இந்த படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் பரத்வாஜ் சிறப்புடன் கொடுத்திருந்தார். மல்லிகாவுடன் ஏற்படும் பள்ளிக்கால காதல் தான் இந்த படத்தின் சிறந்த காதல் கதையாக நிறைய பேர் ஏற்றுக்கொண்டது. சிறுவயது சேரன் ஆக இந்த படத்தில் நடித்தவர் அற்புதமாக நடித்திருப்பார்.
3: ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், பிரபு, கேப்ரில்லா மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் 3. இந்த படத்தில் அதிகம் ரசிக்கப்பட்டது என்று பார்த்தால் அது பள்ளி காலத்தை அற்புதமாகப் படம் பிடித்தது தான். மேலும் இந்த திரைப்படத்தில் வரும் டியூஷன் காட்சிகள் மிகவும் இயற்கையாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் டைமிங் நகைச்சுவை வேற லெவலில் இருந்தது. அனிருத் இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாட்டை: சமுத்திரக்கனி ஆசிரியராக நமக்கெல்லாம் பாடம் எடுக்க ஆரம்பித்த திரைப்படம் சாட்டை. இந்த திரைப்படத்தில் பள்ளி வாழ்க்கையை இயல்பாக படம் பிடித்துக் காட்டினார்கள். நாம் பள்ளியில் படித்த பொழுது நிச்சயம் நமக்கு ஒரு வாத்தியார் மிகவும் பிடித்தவராக இருந்திருப்பார். அந்த வயதுக்கு ஏற்றவாறு அரசியல், தினசரி நடப்பு, பள்ளிப்பாடம் என்று அனைத்தையும் திறம்பட நமக்கு எடுத்து உரைதிருப்பார். அப்படி ஒரு ஆசிரியரை இந்த திரைப்படம் கண் முன்னே கொண்டு வந்தது. யுவன், தம்பி ராமையா, மஹிமா நம்பியார் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
பசங்க: முழு திரைப்படத்தையும் சிறுவர் சிறுமியரை வைத்து எடுத்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு பசங்க திரைப்படத்தை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். கதைப்படி பள்ளியில் பயிலும் சிறுவர்கள் இருவரும் அவர்கள் கொள்ளும் பொறாமையும், போட்டியும், அவர்களது நண்பர்களும் என்று நமது பள்ளி காலத்திற்கே கொண்டு சென்ற திரைப்படம் பசங்க. இந்த படத்தில் நடித்திருந்த அனைத்து சிறுவர்களும் நமக்கு நடித்தது போலவே தோன்றியிருக்காது. அவ்வளவு யதார்த்தம். நடிகர் விமல் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
96: தொண்ணூறுகளில் பள்ளியில் படித்த காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்த சினிமாவாக இந்த படம் சமீபத்தில் வெளிவந்தது. கதைப்படி பள்ளியில் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் விவரம் அறியா காதல் எப்படி பிரிந்து பின்னாளில் தனித்தனியே பயணம் செய்து மீண்டும் ஒருநாள் சந்திக்கின்றனர் என்பதை உணர்வுபூர்வமாக கூறியிருந்த படமாக இருந்தது. பிரேம்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இளையராஜா பாடல்களை கையாண்ட விதம் நமக்கு நாஸ்டால்ஜியா உணர்வை கொடுத்தது என்றால் மிகையல்ல. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார்.
முதல் நீ முடிவும் நீ: 2022ஆம் ஆண்டு ஜீ டிவியின் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் முதல் நீ முடிவும் நீ. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 90களில் நடக்கும் சென்னை நகர பள்ளி வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டி இருந்தது. இந்தத் திரைப்படத்தை இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியிருந்தார். பள்ளி நாட்கள், விளையாட்டுக்கள், இனக்கவர்ச்சி போன்றவற்றை கதையில் சுவாரசியமாக காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படம் நல்லதொரு வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.