தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் டிவிட்டர் பக்கத்தில் 1 கோடி ஃபாலோவர்ஸை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நடிக்க வந்த ஆரம்பத்தில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள், பலரது கேலி, கிண்டலுக்கு ஆளான தனுஷ் தனது அயராத உழைப்பாலும், திறமையாலும் தற்போது ஹாலிவுட் வரை சென்று தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில், அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என எப்போதும் பிஸியாகவே வலம் வருகிறார். தற்போது கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்தடுத்து, வெற்றிமாறன், செல்வராகவன், மாரி செல்வராஜ், சேகர் காமுல்லா, என முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் தனுஷ், தமிழ் சினிமாவில் ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோவர்சை கொண்ட பிரபலம் என்ற சாதனையை படைத்துள்ளார். இவரை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கமல் 68 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் இரண்டாவது இடத்திலும், 59 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் ரஜினிகாந்த் 3 ஆவது இடத்திலும், 32 லட்சம் ஃபாலோவார் வைத்திருக்கும் விஜய் 4 ஆவது இடத்திலும் உள்ளார்கள்.
