ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முன்கூட்டியே அனைத்தையும் ஆராய்ந்து செயல்படுத்திய ஆண்டவர்.. உலகநாயகன்னா சும்மாவா?

தமிழ் சினிமாவுக்கு பல புதுமையான தொழில்நுட்பங்களையும், நாம் அறிந்திராத விஷயங்களையும் அறிமுகப்படுத்தியவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இது போன்ற ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் அவர் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, லிசி, டிம்பிள் கபாடியா, சாருஹாசன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை புரிந்தது. நாவலாசிரியர் சுஜாதா எழுதி இருந்த கதையை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இருந்தார்.

திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த திரைப்படம் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும். மேலும் விஞ்ஞானம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் சலாமியா என்று புதிதாக ஒரு நாட்டை உருவாக்கி, அதில் புதிய மொழியை பேசும் படி எடுத்திருப்பார்கள்.

இதுதவிர சூப்பர் கம்ப்யூட்டர், ராக்கெட் என்று இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பல புதுமைகளை காட்டியிருப்பார்கள். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும் இளையராஜா கம்ப்யூட்டரை வைத்து உருவாக்கினார். இதனால் கம்ப்யூட்டரை முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கு உண்டு.

இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த டைட்டில் பாடல் ரொம்பவும் புதுமையாக எடுக்கப்பட்டிருந்தது. இது சயின்ஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இளையராஜா அந்த டைட்டில் பாடலில் ரோபோ வாய்ஸ் ஒன்றை சேர்த்திருப்பார். இது அனைவரிடமும் நல்ல பாராட்டைப் பெற்றது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்திலும் அனிருத் டைட்டில் சாங்கை அதே பாணியில் உருவாக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் முந்தைய விக்ரம் படத்தை காட்டிலும் அதிக மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News