புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே பாட்டுக்கு 2 நேஷனல் அவார்டா.! பாட்டு மட்டும் இல்லைங்க படமும் அப்படி இருக்கும்

இந்திய திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று தேசிய விருது. இந்த விருது சிறந்த படம், இயக்குனர், நடிகர், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் ஒரே பாடலை தமிழ், இந்தியிலும் பாடிய இரண்டு பின்னணிப் பாடகிகள் தேசிய விருது பெற்றுள்ளனர். பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தை கமலஹாசன் தயாரித்திருந்தார்.

தேவர்மகன் படம் 1993இல் பல பிரிவுகளின் கீழ் 5 தேசிய விருது வென்றது. இப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ரேவதியும், சிறப்பு விருது சிவாஜிக்கும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த மாநிலமொழித் திரைப்படம் என்ற விருதையும் தேவர்மகன் படம் வென்றது.

தேவர் மகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் இடம்பெற்று இருந்தது. இப்படத்தில் உள்ள பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சென்று ஹிட்டானது. தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா என்ற பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை எஸ் ஜானகி பெற்றார்.

தமிழில் தேவர்மகன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விரசாத் என ஹிந்தியில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. ஹிந்தி ரீமேக்கில் இஞ்சி இடுப்பழகா பாடலை சித்ரா பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கும் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை சின்னக்குயில் சித்ரா பெற்றிருந்தார்.

இதன்மூலம் தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகா என்ற ஒரே பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடியதற்காக ஜானகி மற்றும் சித்ரா இருவரும் தேசிய விருது பெற்றுள்ளனர். இதுவரை ஜானகி நான்கு தேசிய விருதுகளும், சித்ரா 6 தேசிய விருதுகளும் பெற்றுள்ளனர்.

Trending News