இப்போது பான் இந்திய கான்செப்ட் மூலம் படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளூர் படங்களுக்கு இணையாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகின்றன. என்றாலும் கூட நடிகர்கள் தங்கள் மொழியில் நடித்து அதை மற்ற மொழிகளில் டப் செய்கிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசன் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என 5 மொழிகளிலும் நேரடியாக நடித்து 200 நாட்கள் மேல் ஓடிய படங்கள் உள்ளன. இப்போது படங்களின் வெற்றி வெளியாகிய முதல் 5 நாள் கலெக்ஷனில் கூறி விடுகின்றனர். முன்பெல்லாம் படங்கள் வெளியாகி 100, 200 நாட்கள் ஒடுவதையே வெற்றியாக அழைத்தனர். இப்போது அது சாத்தியமில்லை என்றாலும், மற்ற மொழிகளில் ஹீரோக்கள் ஒரு படமாவது ஹிட் கொடுக்க வேண்டுமென முயற்சித்து வருகின்றனர்.
மரோ சரித்ரா படம் கமலுக்கு மட்டுமின்றி தெலுங்கு சினிமாவின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 1978இல் தெலுங்கில் வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது தெலுங்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தி மொழியில் ஏக் தூஜே கேலியே என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. இந்த திரைப்படமானது மலையாள மொழியில் திரக்கள் எழுதிய கவிதா எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது.
இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழி மாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது. இந்த திரைப்படம் அதிகபட்சமாக 700 நாட்கள் வரை ஓடியது. பெங்களூரிலுள்ள கல்பனா என்னும் திரையரங்குகளில் 693 நாள் கொண்டாடியது. ஹிந்தியிலும் இந்த படம் 300 நாட்கள் மேல் ஓடியது. ஒரு தமிழ் நடிகரின் நேரடி ஹிந்தி படமாக வெளியாகி 300 நாட்கள் ஓடியது இதுதான் முதன் முறை. ஹிந்தியிலேயே வெளியாகி இந்த படம் பெங்களூர் கல்பனா திரையரங்கில் 250 நாள் கொண்டாடியது. ஒரே படம் வெவ்வேறு மொழிகளில் வெளியாகி ஒரே திரையரங்கில் இவ்வளவு பெரிய ஹிட்டடித்தது ஆச்சரியமான விஷயம்.
தெலுங்கில் கமலின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது சாகர சங்கமம். இது தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் டப் செய்து வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்தது. 1983ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை கே.விஸ்வநாத் இயக்கியிருந்தார். ஜெயப்பிரதா, சரத்பாபு, ஷைலஜா என பலர் நடித்திருந்தனர். இந்த படமும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் 200 மேல் ஓடியது. குறிப்பாக பெங்களூரில் கல்பனா மற்றும் நடராஜ் திரையரங்குகளில் முறையே 511 மற்றும் 217 நாட்கள்.
பல்வேறு மொழிகளில் உருவான ஊமை படமான புஷ்பகா விமானம், தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் இந்த படம் வெளியானது. எல்லா இடங்களிலும் வெற்றி கொடியை நாட்டிய இது பெங்களூரின் சுவப்னா திரையரங்கில் 273 நாள் கொண்டாடியது. சங்கீதம் சீனிவாஸ் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி அந்த வருடம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
நாயகன், அபூர்வ சகோதரர்கள், சிகப்பு ரோஜாக்கள் படங்களும் மொழிகளை தாண்டி மிகப்பெரிய வெற்றிகளை அடைந்தது. அன்றைய காலகட்டத்தில் முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 முக்கிய மொழிகளில் நேரடி படங்கள் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய ஒரே நாயகனாக கமல் இருந்து வருகிறார். மேலும் 5 மொழிகளில் ஃபிலிம் ஃபேர் அவார்ட் வாங்கிய ஒரே நடிகரும் இவரே.