ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பீஸ்ட் திரைப்படம் வெற்றியா, தோல்வியா?.. வெளிப்படையாக கூறிய உதயநிதி ஸ்டாலின்

ஒரு நடிகராக, அரசியல்வாதியாக பிரபலமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்பட தமிழக உரிமையை கைப்பற்றி வருகிறார். இதன் மூலம் அவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்களான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், காத்துவாக்குல 2 காதல் போன்ற பல திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. மேலும் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் கமலின் விக்ரம் படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார்.

இதுபற்றி தற்போது ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. அதாவது அவர் வாங்கி வெளியிட்ட இந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியா, தோல்வியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் முந்தைய திரைப்படங்களைக் காட்டிலும் நல்ல வசூலை பெற்றதாக கூறினார்.

அதற்கு அடுத்து வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் அதுவும் ஒரு வெற்றிப்படம் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் அந்தப் படம் ஒரு தோல்விப்படம் என்று பலரும் கூறி வந்தனர். தற்போது அதை பற்றி பேசிய உதயநிதி பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் பீஸ்ட் திரைப்படம் பற்றிய வந்த கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் காத்துவாக்குல 2 காதல் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை சோலோ ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களிலேயே இதுதான் அதிகபட்ச வசூலை கொடுத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது இவர் பீஸ்ட் திரைப்படம் குறித்து வெளியிட்ட இந்த செய்தி ரசிகர்களை குஷி ஆகியுள்ளது.

Trending News