மாணவர்களுக்கு நஞ்சை விதைக்கும் மாஸ் நடிகர்கள்.. சீர்கெட்ட சமுதாயம் உருவாக இவர்கள்தான் காரணம்

குழந்தைகள் வீட்டில் இருந்தே கல்வியைக் கற்க முடியும். ஆனால் பள்ளிக்குச் சென்றுதான் படிக்க வேண்டும் என வற்புறுத்தலின் காரணம் அங்குதான் மாணவர்களுக்கு ஒழுக்கம், மரியாதை போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் என்று மொபைல் மற்றும் லேப்டாப் மூலம் படிக்கத் தொடங்கினர்.

ஆனால் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியரை அவமதிப்பது, அடிக்க கை ஓங்குவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை அளிக்கிறது. மாணவர்களுக்கு இவ்வளவு தைரியம் வருவதற்கு காரணம் சினிமாதான் என்று கூறப்படுகிறது.

தற்போது பள்ளி படிக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பது சினிமாவை தான். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ள நடிகர்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் ஆசிரியர்களை அவமதிப்பது போன்ற காட்சிகளிலும் நடிக்கின்றனர்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் முதல் பாதியில் விஜய் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடல் ஆசிரியரை கிண்டலாக கூறுவதுபோல் அமைந்திருந்தது. ஆனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதற்கு அடுத்தபடியாக தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஆசிரியர்களை வாத்தியார்கள் என்ற அழைப்பார்கள். ஆனால் அதை சுருக்கி தனுஷ் வாத்தி என்று தனது படத்தில் வைத்துள்ளார். இதே படம் தெலுங்கில் மட்டும் சார் என்று மரியாதையாக வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் டான் படத்திலும் ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி என சிவகார்த்திகேயன் எழுதுகிறார். இவ்வாறு பெரிய நடிகர்களே சமூக அக்கறை இல்லாமல் நடந்து கொள்வதால் மாணவர்கள் இது போன்ற செயல்களில் துணிச்சலாக ஈடுபட்டு வருகின்றனர்.