வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு பெரும் ஆளுமைகள் எப்போதுமே இருப்பது வாடிக்கை. எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஜோடிகளில் அதிகம் மோதிக்கொண்டதும், பலத்த போட்டி நடைபெற்றதும், நடைபெறுவதும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருக்கும் இடையில் தான். இவர்கள் இருவரும் இதுவரை 14 படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்துள்ளனர். முதல் பாகத்தில் 6 திரைப்படங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 7 திரைப்படங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வேலைக்காரன் – காதல் பரிசு (1987): 1987ஆம் வருடம் மீண்டும் ரஜினியும் கமலும் மோதிக்கொண்டனர். இம்முறை இருவருமே வணிக ரீதியான படத்தை கொடுத்தனர். ஹிந்தியில் வெற்றி பெற்ற நமக் ஹலால் என்னும் திரைப்படத்தை தமிழில் ரஜினிகாந்த், அமலா, நாசர், செந்தில் உட்பட பலர் நடிக்க இயக்கினார் எஸ்.பி.முத்துராமன். இளையராஜா இசையில் இன்றும் “வா.. வா… வா… கண்ணா வா…” பாடல் மிகப்பிரபலம். வணிக ரீதியாக நல்ல வெற்றி பெற்றது திரைப்படம்.
அதே நேரம் கமல் நடித்த காதல் பரிசு திரைப்படம் ஒரு மாதம் முன்னதாக வெளியாகி இருந்தது. இந்த இரு படங்கள் எதிர் எதிர் போட்டி என்று சொல்ல முடியாது. ஆனபோதும், இவர்கள் படங்களை தவிர அப்போது பெரிய படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த படமும் மிகப்பெரும் வெற்றிபெற்றது. “ஹே.. உன்னைத்தானே..” “கூ.. கூ.. என்று…குயில் கூவாதோ…?” ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. இரண்டு படங்களையும் இளையராஜா தாங்கி பிடித்தார். இதில் கமலுக்கு ஜோடி அம்பிகா, ராதா என்று சகோதரிகள், ஜகந்நாதன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
மாப்பிள்ளை – வெற்றிவிழா (1989): இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் இரு பெரும் நட்சத்திரங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டனர். ரஜியினின் மாப்பிள்ளை, கமலின் வெற்றிவிழா ஒரே நாள் ரிலீஸ். தமிழகமே திக்குமுக்காடி போனது. மாப்பிள்ளை படத்தில் அமலாவுடன், ஸ்ரீவித்யா மாமியார் வேடத்தில் நடித்திருந்தார். ஸ்ரீவித்யாவிற்கு கணவனாக ரஜினிகாந்த் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை திரைப்படத்திற்கு இசை இளையராஜா, இயக்கம் ராஜசேகர். பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெருவாரியாக ரசித்தார்கள். இந்த படம் தனுஷ் நடிக்க மீண்டும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 200 நாட்களுக்கு மேல் ஓடியது இந்த திரைப்படம்.
கமல், பிரபு, குஷ்பு, அமலா நடிக்க வெளிவந்த திரைப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார். ஜேசன் போர்ன் நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கும் இசை இளையராஜா. பழசு எல்லாம் மறந்து போன போலீஸ் அதிகாரியாக கமல், வில்லனாக ‘ஜிந்தா’ என்னும் ரோலில் சமீபத்தில் இறந்த சலீம் கோஷ் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படமும் வெள்ளிவிழா கண்டது, அதே போல பாடல்கள் பிளாட்டினம் டிஸ்க் என்னும் மாபெரும் காஸெட் விற்பனை புரட்சி செய்தது.
தளபதி – குணா (1991): இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழக சூ ப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இணைந்து நடித்த திரைப்படம் தளபதி. இளையராஜா இசை, பிசி ஸ்ரீராம் கேமரா என்று படம் உலகத்தரம். “ராக்கம்மா கைய தட்டு…” பாடல் பல வாரங்கள் உலகின் முன்னணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே 3 கோடி ருபாய் வரை வசூலித்து கொடுத்தது. 200 நாட்களுக்கு மேல் படம் வெறியாய் ஓடியது என்றால் மிகை அல்ல.
மறுபக்கம் கமல், ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்த குணா. மனநிலை பாதிக்கப்பட்ட குணாவிற்கு அபிராமி அம்மன் மனித உருவம் எடுத்துவந்து தன்னை கட்டிக்கொள்வார் என்று நம்பிக்கை அதன் படி ரோஷினியை கடத்திக்கொண்டு போகும் கதை. இந்த படம் மக்களுக்கு பிடிக்கவில்லை. இது ஒரு காலத்தை முந்தைய படைப்பு எனலாம். இன்று இந்த படத்தை பலரும் பாராட்ட தவறுவது இல்லை. லேசான மனது கொண்டவர்களுக்கான படம் இதுவல்ல. இரண்டு படங்களுக்கும் இளையராஜா சரியான உழைப்பை தந்திருந்தார். சமீபத்தில் இந்த படம் பெரிய நஷ்டம் இல்லை என்று கமல் குறிப்பிட்டு இருந்தார்.
பாண்டியன் – தேவர் மகன் (1992): மீண்டும் ஒருமுறை ரஜினிகாந்தின் பாண்டியன் திரைப்படமும், கமலின் தேவர் மகன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. பாண்டியன் திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். போலீசாக ரஜினிகாந்த் நடித்த இந்த திரைப்படம் வெகுவாக மக்களை கவரவில்லை. சண்டை காட்சிகளும் நம்புபடியாக இல்லை. அதனால் படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது.
மறுமுனையில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கவுதமி நடித்திருந்த தேவர்மகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜா இசை அமைத்த பாடல்கள் எல்லாம் மாபெரும் ஹிட். ‘போற்றி பாடடி பெண்ணே…’ பாடலை தவறாக பயன்படுத்திய மக்களால் ஜாதி பிரச்சனை உருவானது தனிக்கதை. 200 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இந்த படத்திற்கு திரைக்கதையை கமல்ஹாசன் முதல் முறையாக மென்பொருள் கொண்டு எழுதினார் என்பது சிறப்பு.
பாட்ஷா – சதிலீலாவதி (1995): ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் முக்கியமான ஒரு படம் பாட்ஷா. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு டான் ஆக நடித்திருந்தார். நக்மா அவருக்கு ஜோடி. அண்ணாமலை படத்திற்கு பிறகு இந்த படத்திலும் தேவா இசை அமைத்திருந்தார், சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். சென்னையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் பாட்ஷா எதற்கு இங்கு வந்தார் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது திரைப்படம். இந்த படம் கிட்ட தட்ட 15 மாதங்கள் தேட்டர்களில் ஓடியது என்பது வரலாறு
கமல்ஹசன், கல்பனா, கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்த ‘சதிலீலாவதி’ திரைப்படத்தை பாலு மஹேந்திரா இயக்கி இருந்தார். வசனம் ‘கிரேஸி’ மோகன். இந்த படம் பாட்ஷாவுக்கு போட்டி என்று சொன்னால் கமல் ரசிகர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்ப கதையான இதில் நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நகைச்சுவை நடிகை கோவை சரளா நடிக்கிறார் என்பதை அப்போதைய சினிமா வட்டாரம் ஏற்றுக்கொள்ள மறுத்தது என்பது உண்மை. இந்த படமும் வெற்றியை பதிவு செய்தது. போட்ட முதலை விட 4 மடங்கு வசூலித்ததாக அப்போது கமல் தெரிவித்து இருந்தார்.
முத்து – குருதிப்புனல் (1995): அதே 1995ஆம் வருடம் மீண்டும் இவர்கள் இருவரும் முத்து – குருதிப்புனல் படங்களின் மூலம் மோதிக்கொண்டனர். ‘தென்மாவின் கொம்பத்’ என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கி தமிழ் இயக்கினார் கே.எஸ். ரவிக்குமார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் ரஜினிகாந்த் படத்திற்கு இசை அமைக்க, மீனா, சரத் பாபு, செந்தில், வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் இருந்து அரசியல் டயலாக்களும் ரஜினி படத்தில் இடம் பெற ஆரமித்தது. இந்த படம் ஒரு சில்வர் ஜூப்லி ஹிட் ஆனது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்கும் கமல், இந்த முறை பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான த்ரோகால் படத்தை தமிழில் மறுவாக்கம் செய்திருந்தனர். இந்த படத்தில் போலீசுக்கும், நக்ஸலைட்டுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளும், அதனால் போலீசாரின் குடும்பம் பாதிக்கப்படுவதையும் சிறப்பாக காட்டி இருந்தனர். மாற்று சினிமாவை எதிர்பார்த்த மக்களின் ஆதரவு கிடைத்தபோதும் ‘முத்து’ படத்தின் வெற்றிக்கு முன் இந்த படம் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை. ஆனபோதும் இந்த படம் எங்களுக்கு வெற்றி படமே என்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ் (2005): 1995ஆம் ஆண்டுக்கு பிறகு இரு பெரும் நடிகர்களும் நேரடியாக படங்கள் மூலமாக மோதிக்கொள்ளவில்லை. இருவரும் படத்தின் வசூல் பாதிப்பதை உணர்ந்து தங்களது படத் தேதிகளை தள்ளி வைத்தனர். 10 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்தனர். பி.வாசு இயக்கத்தில், மலையாள ‘மணிச்சித்திர தாளு’ படத்தின் உரிமையை ரஜினிகாந்த், நாசர், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினீத் என்று நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு எடுக்கப்பட்ட படம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த படம் பல தியேட்டர்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. பிரபு குடும்பத்தின் சொந்த படமான இதை அவர்களை சாந்தி தியேட்டரில் 800 நாட்கள் வெற்றிகரமாக ஓட்டினார்கள்.
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை ஒரு ‘பிளாக் ஹியூமர்’ வகையில் எடுத்திருந்தார் கமல். இது தமிழுக்கு புதுசு. மேலும் முதல் முறையாக டிஜிட்டல் கமெராவில் படத்தை எடுத்து 50 லட்சம் வரை மிச்சப்படுத்தினார் என்றும் செய்திகள் வலியானது. இந்த படத்தில் கமல், பசுபதி, வையாபுரி, மனிஷா கோயிரலா, நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
2005ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினியும், கமலும் தங்களது படங்கள் மூலமாக மோதிக்கொள்ளவில்லை. படங்கள் மோதினாலும் அவர்கள் எப்போதும் போல நண்பர்களாகவே இருந்து இன்றைய தலைமுறை நடிகர்களை ஆச்சரிய படுத்துகிறார்கள். அவர்கள் இருவரது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போது தமிழகமே திருவிழா போல தோன்றுகிறது. அதனால் அவர்கள் மீண்டும் மோதிக்கொள்வது ஒருவிதத்தில் நல்லதும் கூட.
கமல் நடித்து இந்தியன் 2 அல்லது தேவர்மகன் 2 வெளியாகலாம். அதே நேரம் சூப்பர்ஸ்டார் நடித்து தலைவர் 169 திரைப்படமும் வெளியாகலாம். அப்படி ஒரு போட்டி நடைபெற்றால் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்பதே உண்மை.