வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே போட்ட 5 நடிகர்கள்.. பல மடங்காக திருப்பி எடுக்கும் கமல்

பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வேறு எதிலாவது முதலீடு செய்வது வழக்கம். அதிலும் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் பணத்தை பல பிசினஸில் போட்டு லாபகரமாக மாற்றி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும் தங்களை வளர்த்து விட்ட சினிமாவை மறக்காமல், தங்களுடைய பணத்தை அதில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் சிலருக்கு அது நல்லதாகவும், சில நடிகர்களுக்கு நஷ்டமாகவும் மாறி இருக்கிறது. அப்படி சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே இறக்கிய ஐந்து ஜாம்பவான்களை பற்றி இங்கு காண்போம்.

கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களால் ஆண்டவர், உலக நாயகன் என்று அழைக்கப்பட்டு வரும் கமல் சினிமாவை வெறித்தனமாக நேசிப்பவர். பல புதுமையான விஷயங்களை தெரிந்துகொண்டு அதை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து.

அதனால் அவர் பல தொழில்நுட்பங்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து, நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் தயாரித்து நடித்த சத்யா, தேவர்மகன், குருதிப்புனல் ஆகியவற்றில் தொடங்கி தற்போது வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் தான்.

இதில் சில திரைப்படங்கள் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தாலும் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது விக்ரம் திரைப்படம் கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறது. அந்த வகையில் ஆண்டவர் தற்போது பாக்ஸ் ஆபீசை கலக்கும் ஒரு நாயகனாக மாறியுள்ளார்.

பார்த்திபன் ஒரு இயக்குநராக, நடிகராக ரசிகர்களை கவர்ந்த பார்த்திபன் பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். யாரும் செய்யத் துணியாத பல புதுமையான விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார்.

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்த அந்த திரைப்படம் வித்யாசமான முயற்சிக்காக பல விருதுகளை பெற்றது. அதை தொடர்ந்து இவர் தற்போது இரவின் நிழல்கள் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

அர்ஜுன் பல திரைப்படங்களில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து மிரட்டி இருக்கும் அர்ஜுன் பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். அந்த வகையில் இவர் வேதம், தவம் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் அவருக்கு லாபத்தை கொடுக்கவில்லை.

சேரன் எதார்த்தமான பல படைப்புகளை இயக்கியிருக்கும் சேரன் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக மற்றும் நடிகராக மாறினார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆடும் கூத்து, முரண் போன்ற திரைப்படங்களை தயாரித்து இருந்தார். இதில் ஆடும் கூத்து திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

டி ராஜேந்தர் தன்னுடைய அடுக்குமொழி வசனத்தின் மூலம் பிரபலமான டி ராஜேந்தர் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் அவர் தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். அவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சில காலங்களுக்குப் பிறகு அவர் தயாரித்து நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. அதிலும் அவர் நடிப்பில் வெளிவந்த வீராசாமி திரைப்படம் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

Trending News