வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் நேர்த்தியான, வித்தியாசமான வகையில் திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.
பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் என்றால் அது பாக்யராஜ் தான். ஜனரஞ்சக படங்கள் வெளிவந்த 80களில் இவரது திரைக்கதை மிகவும் பிரபலம். எந்த காட்சியை எங்கு வைத்தால் அது மக்களுக்கு பிடிக்கும், எந்த அளவுக்கு ஒரு காட்சியை உயர்த்தி பிடிக்கவேண்டும் என்று சகலமும் அறிந்தவர். அவரது படங்களான முந்தானை முடிச்சு, பாமா ருக்மணி, தாவணிகனவுகள், சுவரில்லாத சித்திரங்கள் என்று அணைத்து படங்களிலும் காட்சிக்கு காட்சி திரைக்கதை தொடர்பு இருப்பதை உணரலாம்
மணிவண்ணன்: வித்தியாசமாக படங்களை இயக்கம் செய்யும் மணிவண்ணனும் நேர்த்தியான திரைக்கதை அமைப்பதில் வல்லவர். அவரது படங்களில் ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சி சங்கிலி தொடர்போல வருவதை நாம் கவனித்திருக்க கூடும். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமான அமைதிப்படையை திரைக்கதை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் வைத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு அந்த படத்தில் தேவை இல்லாத காட்சிகள் என்று எதுவும் இல்லை.
மணிரத்னம்: தமிழ் சினிமாவில் புதுமை திரைக்கதையை புகுத்தியவர்களில் முக்கியமானவர் மணிரத்னம். அவர் வந்த பிறகு நகரத்து கதைகள் அதிக கவனம் பெறத்தொடங்கியது. அதோடு அவரது திரைக்கதையும் கவனிக்கப்பட்டது. அவரது படங்களில் திரைக்கதை ஜெட் வேகத்தில் இருக்காது. மாறாக காட்சியை இயல்பாக கொண்டு செல்ல உதவும். அலைபாயுதே படத்தை நீங்கள் பார்த்திருந்தால் அது புரிந்திருக்கும். இரண்டரை மணிநேர படம் தான் என்றாலும் வேகமில்லாத படமாக இருக்கும். ஆனபோதும் அது நமக்கு உறுத்தலை கொடுக்காது. இதமாக படம் நகர்வது போல இருக்கும்.
ஷங்கர் – சுஜாதா: சங்கரின் படங்களில் திரைக்கதை கட்சிதமாக, சுறுசுறுப்பாக இருப்பதை நாம் பல படங்களில் உண்டர்ந்திருப்போம். முதல்வன், இந்தியன், சிவாஜி போன்ற படங்கள் விறு விறு என்று சென்று முடிவதை நாம் உணர்ந்திருப்போம். இந்த அளவுக்கு ஜெட் வேகத்தில் படம் நகர ஷங்கர் நாடுவது எழுத்தாளர் சுஜாதாவின் உதவியை. சுதாதா இருக்கும் வரை ஷங்கரின் படங்களில் திரைக்கதை சொதப்பல் என்று எதுவும் நம் கண்களை உறுத்தி இருக்காது. சுஜாதா போல சிறந்த திரைக்கதை அமைக்கும் வல்லமை வேறு யாருக்கும் இல்லை என்று கூட கூறலாம்.
கமல்ஹாசன்: இயக்குனராக கமல்ஹாசன் மிகக்குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும், திரைக்கதை ஆசிரியராக பல படங்களில் பங்காற்றியுள்ளார். அவர் எழுதிய தேவர்மகன், அன்பே சிவம், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்களின் திரைக்கதை வித்தியாசமானவை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத அளவுக்கு வித்தியாசமான வகையில் ஒவ்வொரு படங்களையும் கொடுத்திருப்பார். விருமாண்டியில் ரொசோமோன் வகையில் கதையை சொல்லி இருப்பார். அதை திரைக்கதையில் எந்த வகையிலும் குழப்பாமல் கூறியிருப்பார். விஸ்வரூபம் படத்தில் நான்-லீனியர் முறையில் கதையை கூறி இருப்பார்.
வெற்றிமாறன்: இதுவரை தோல்வியே காணாத இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். தான் இயக்கிய படங்களில் இதுவரை நடிகர்களுக்காக எந்தவகையிலும் சமரசம் செய்து கொள்ளாதவர். அவரது படங்களில் ரவுடிசம் இருந்தாலும் அதில் துளியும் திரைக்கதை தொய்வோ அல்லது நம்ப முடியாத திரைக்கதை கூறுதலோ இருக்காது. ஒவ்வொரு காட்சியும் மற்றொரு காட்சிக்கு நம்மை நகர்த்தி செல்லும். அந்த வகையில் இவர் இயக்கிய ஆடுகளம் படத்தை சிறந்த திரைக்கதை படமாக நாம் அணுகலாம்.
லோகேஷ் கனகராஜ்: சமீபத்திய தமிழ் சினிமாவின் மட்டுமல்ல தென்னிந்தியா சினிமாவின் ஹாட் இயக்குனர் என்றால் அது லோகேஷ் தான். லோகேஷின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு அவரது நேர்த்தியான திரைக்கதைக்கு சேரும். திரைக்கதையின் அவசியத்தை அவரது மானசீக குருவான கமல்ஹாசனிடம் இருந்து அவர் கற்றிருக்கிறார். அதன் காரணமாகவே அவரது மாநகரம், கைதி, விக்ரம் என்று அணைத்து படங்களும் கொஞ்சம் கூட திரையில் இருந்து எடுக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை கொண்டிருக்கும். இவர் முதல் இரண்டு மாதங்கள் திரைக்கதை அமைப்பதற்கு மட்டுமே எடுத்துக்கொள்கிறார் என்பது கூடுதல் தகவல்