கடந்த 68 வருடங்களாக சினிமாவில் சிறப்பாக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. இதில் 7 தமிழ் நடிகர்கள் நேஷனல் அவார்டு கைப்பற்றி இருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கவில்லை.
எம்ஜிஆர்: சினிமாவிலும் அரசியலிலும் பூகுந்து விளையாடிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர், 1971 ஆம் ஆண்டு மத்திய அரசு அவரை அகில இந்திய சிறப்பு நடிகராக தேர்வு செய்து, பாரத ரத்னா விருது வழங்கியது. இந்த விருது சத்யா பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காக கிடைத்தது.
எம்ஜிஆருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த ரிக்சாக்காரன் திரைப்படம் தமிழகத்தில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூல் வேட்டை ஆடியது. இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மஞ்சுளா நடித்திருப்பார்.
கமல்: நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் நடித்த கமல், அந்த படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். பிறகு 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் கதாநாயகனாக சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது பெற்றார்.
அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்திற்கும், பிறகு 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்திற்கும் இவருக்கு வரிசையாக தேசிய விருதுகள் வந்து குவிந்தது. இவ்வாறு 4 நேஷனல் விருது இவருடைய நடிப்புக்கு மட்டுமே கிடைத்தது.
அத்துடன் 1992 ஆம் ஆண்டு இவர் நடித்து தயாரித்த தேவர்மகன் திரைப்படத்திற்கு சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார். இவ்வாறு 220 படங்களுக்கு மேல் நடித்த உலகநாயகன் கமலஹாசன் 2014 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 2016 ஆம் ஆண்டு செவாலியே விருது பெற்றார்.
விக்ரம்: முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த விக்ரம், கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் முன்னேறி சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும் சாமி என வரிசையாக கதாநாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த பிதாமகன் திரைப்படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதில் விக்ரம், சித்தன் என்ற கதாபாத்திரத்தில் இறந்தவர்களின் உடலை எரிப்பதனையே தொழிலாக கொண்டு, மனிதர்களுடன் ஒட்டாமல் மிருக குணம் கொண்டவராக தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தியிருப்பார்.
தனுஷ்: பெரும்பாலும் கமர்சியல் படங்களை தவிர்த்து, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். அப்படிதான் இவர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
அதை தொடங்குதல் 2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்ததற்காகவும் 2-வது தேசிய விருது தனுஷுக்கு கிடைத்தது. இந்தப் படம் ஒரே மாதத்திற்குள் 100 கோடி வசூலை தட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வித்தியாச வித்தியாசமாக தன்னுடைய நடிப்பை ஒவ்வொரு படங்களிலும் வெளிப்படுத்தும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.
பிரகாஷ்ராஜ்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக நெசவாளரின் கதையை மையமாக வைத்து இவரது நடிப்பில் வெளியான காஞ்சிவரம் படத்திற்காக இவருக்கு 2007 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதில் வேங்கடம் என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
விஜய் சேதுபதி: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார் என வருடத்திற்கு ஆரேழு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் சேதுபதி, திருநங்கையாக நடித்திருந்த படம்தான் சூப்பர் டீலக்ஸ். கடந்த 2019 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் காயத்ரியை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பிறந்த பிறகு திருநங்கையாக மாறிய மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
மாணிக்கம் மும்பைக்கு சென்று ஷில்பா என்ற திருநங்கையாக ஆக மாறி தன்னுடைய மனைவி ஜோதி மற்றும் மகன் ராசுக்குட்டி இருவரையும் பார்க்க வருகிறார். அதன் பிறகு விஜய் சேதுபதி இந்த படத்தில் உணர்வுபூர்வமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதற்காகவே இவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.
சூர்யா: நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 68 வது தேசிய திரைப்பட விருதுகளில் 5 விருதுகளை இந்த ஒரு படம் மட்டுமே தட்டிச் சென்றுள்ளது.
இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்கராவிற்கும் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ்க்கும், சிறந்த படத்திற்கான விருது என ஆகமொத்தம் 5 நேஷனல் விருது இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.
இவ்வாறு இந்த 7 நடிகர்களும் தேசிய விருதை பெற்றிருந்தாலும் வித்தியாசமான ஸ்டைல், நடை, உடை, டயலாக் டெலிவரி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் காட்டி உலகளாவிய ரசிகர்களை பெற்றிருக்கும் நிலையில் அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இருப்பினும் அவருக்கு 2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.