தமிழ் சினிமாவில் வில்லனாக தன் பயணத்தை ஆரம்பித்து பிறகு ஹீரோவாக மாறி இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் சத்யராஜ். என்னதான் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவர் வில்லன் வேடங்களில் கலக்கிய அத்தனை திரைப்படங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அந்த வகையில் இவருடைய வித்தியாசமான வில்லத்தனமும், பஞ்ச் டயலாக்குகளும் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாதது. அப்படி சத்யராஜ் பேசி பிரபலமான சில வசனங்களை பற்றி இங்கு காண்போம்.
தகடு தகடு: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த காக்கி சட்டை திரைப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். அந்த படத்தில் சத்யராஜ் பேசும் இந்த தகடு தகடு என்ற டயலாக் இப்போது வரை வெகு பிரபலம். வித்தியாசமான பாடி லாங்குவேஜில் அவர் பேசும் இந்த வசனம் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாததாக இருக்கிறது.
என்னம்மா கண்ணு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் பாரத் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதில் சூப்பர் ஸ்டாருக்கு அப்பாவாக வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் சத்யராஜ் இந்த டயலாக்கை பேசி இருப்பார். மிகவும் சாதாரணமாக பேசப்பட்ட இந்த வசனம் பிறகு பயங்கர ஃபேமஸ் ஆனது.
என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்க: 24 மணி நேரம் என்ற படத்தில் சத்யராஜ் மிகவும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். மோகன், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த திரைப்படத்தில் சத்யராஜ் பெண்களை கடத்தி கொலை செய்யும் வில்லனாக மிரட்டி இருப்பார். அப்போது அவர் பெண்களிடம் என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்க என்று கூறுவார். இப்போது வரை இந்த வசனம் பிரபலமாக இருக்கிறது.
நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ: அமைதிப்படை என்ற திரைப்படத்தில் சத்யராஜ் இரு வேடங்களில் நடித்திருப்பார். அதில் வயதான கெட்டப்பில் நடித்திருக்கும் சத்யராஜின் பெயர் தான் நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ. அமாவாசை என்ற பெயரில் பிச்சைக்காரராக இருக்கும் அவர் சில சூழ்ச்சி செய்து எம்எல்ஏவாக மாறிவிடுவார். அதன் பிறகு அவர் தன்னுடைய பெயரை இவ்வாறு மாற்றிக் கொள்வார். மிகப் பிரபலமாக பேசப்பட்ட இந்த பெயர் சில வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைப்படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
மப்புமா மப்பு: இந்த வசனமும் அமைதிப்படை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு காட்சியில் வயதான சத்யராஜ் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தள்ளாடுவார். அப்போது மகன் சத்யராஜ் உங்களுக்கு வயதாகி விட்டது என்று கூறுவார். அதற்கு அவர் அதெல்லாம் இல்லை மப்பு மப்பு என்று நக்கலாக கூறுவார். இந்த வசனமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மணியா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா: அமைதிப்படை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த வசனம் மிகப் பிரபலமாகும். நாகராஜ சோழன் எம்எல்ஏவாக இருக்கும் சத்யராஜ் மணிவண்ணனிடம் இந்த வசனத்தை கூறுவார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த வசனம் இப்போது கூட இளைய தலைமுறைகளிடம் வெகு பிரபலம்.