சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விவேக் தன்னுடைய நகைச்சுவை மூலம் புதுமையான கருத்துக்களையும் மக்களுக்கு கூறி வந்தார். தற்போது அவர் இல்லாவிட்டாலும் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மனதில் என்றும் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்த இவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அந்த வகையில் பாலக்காட்டு மாதவன் என்ற திரைப்படத்தில் விவேக் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் நஷ்டத்தை சந்தித்தது.
ஆனால் உண்மையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு திரைப்படமாகும். அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தில் நகைச்சுவை, சென்டிமென்ட் போன்ற அனைத்து காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மலேசியா போன்ற பல இடங்களிலும் ஏராளமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இப்படம் ரிலீஸ் ஆன அதே தேதியில் கமலின் பாபநாசம் படமும் ரிலீஸ் ஆனது.
உண்மையில் பாபநாசம் திரைப்படம் பாலக்காட்டு மாதவன் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியில் பாகுபலி திரைப்படம் வெளியாக இருந்த காரணத்தினால் பாபநாசம் திரைப்படம் முன்கூட்டியே வெளியானது.
இதை கேள்விப்பட்ட விவேக் நடிகர் சங்கம் முதல் கமல் வரை அனைவரிடமும் கெஞ்சி கேட்டாராம். ஏனென்றால் திடீரென பாபநாசம் திரைப்படம் வெளியான காரணத்தினால் பாலக்காட்டு மாதவன் திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட தியேட்டர்கள் வெகுவாக குறைக்கப்பட்டது. வெளிநாடுகளில் கூட நூற்றுக்கு மேல் கொடுக்கப்பட்ட தியேட்டர்கள் பாதியாக குறைக்கப்பட்டு விட்டதாம்.
இதன் மூலம் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதை அறிந்த விவேக் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போனது. அதன் பிறகு இரு படங்களும் ஒரே தேதியில் வெளியாகி பாபநாசம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலக்காட்டு மாதவன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது.
இந்த விஷயத்தை பல வருடங்களுக்கு முன்பே விவேக் ஒரு மேடை நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் என்ன என்றும், நடிகர் யார் என்பதை பற்றியும் அவர் குறிப்பிட விரும்பவில்லை. ஆனாலும் ரசிகர்கள் அதை கண்டுபிடித்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.