பிரபல சீரியல் நடிகர் தன்னுடைய குடும்ப பிரச்சனையில் சம்மந்தமே இல்லாமல், குறிப்பிட்ட சமூகத்தினரை பத்திரிகையாளர்கள் முன் தவறாக பேசி இப்போது மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கிறார். இப்போது இவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடனே அவரை கைது செய்யுமாறு கருத்துக்கள் வலுத்து வருகின்றன.
சின்னத்திரை சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது திவ்யா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் திவ்யா, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னுடைய வயிற்றில் அவர் எட்டி உதைத்ததால் குழந்தை எந்நேரமும் கலையும் நிலையில் இருப்பதாகவும், மேலும் அர்னவ் செல்லம்மா சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் காவல் துறையில் புகார் செய்து இருக்கிறார்.
இந்த குற்றசாட்டை முற்றிலும் மறுக்கும் நடிகர் அர்னவ் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் சீரியல் நடிகர் ஈஸ்வர் என்றும், அவருடன் சேர்ந்து திவ்யா தன்னுடைய குழந்தையை கலைக்க திட்டமிடுவதாகவும், மேலும் திவ்யா தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த பிரச்சனை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது அர்னவ், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஈஸ்வர் தான் என்றும், ஈஸ்வர் தன்னிடம் இந்த பிரச்சனைக்கு சமாதானம் செய்ய பேசுகிறேன் என்ற பெயரில் ரொம்பவும் கொச்சையாக பேசுகிறார் என்றும், நாங்கள் இருவருமே படித்தவர்கள் மற்றும் சேரியில் பிறந்தவர்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்த கருத்து தான் இப்போது பூதாகரமாகி இருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் அனைவரும் கொச்சையாக பேசுவார்கள் என்றும், படிக்காதவர்கள் என்றும் அர்னவ் கூறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. பலதரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் அர்னவ் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.