இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்
விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.
தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.
இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.
அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.