முதல் படத்திலேயே சேரனை அசிங்கமாக திட்டிய கமல்.. 28 வருடம் மறக்காத அவமானம்

தமிழ் சினிமாவில் எதார்த்தம் மாறாத பல படைப்புகளை கொடுத்த சேரனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவருடைய ஒவ்வொரு படமும் மண்மணம் மாறாமல் இருக்கும். அந்த வகையில் பாரதி கண்ணம்மா, தவமாய் தவமிருந்து, வெற்றிக்கொடி கட்டு இப்படி பல திரைப்படங்கள் அவருடைய புகழை உயர்த்தி இருக்கிறது.

மேலும் அவர் இயக்கிய படங்களுக்காக இதுவரை நான்கு முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இப்படி இயக்குனராக தன் திறமையை நிரூபித்த சேரன் நடிகராகவும் இப்போது அசத்தி கொண்டு இருக்கிறார். தற்போது இவர் ஒரு பேட்டியில் 28 வருடங்களுக்கு முன்பு கமலால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

அதாவது இவர் திரைப்படங்களை இயக்குவதற்கு முன்பு பலரிடம் உதவி இயக்குனராக வேலை செய்து இருக்கிறார். அந்த வகையில் இவர் மகாநதி திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் நேப்பியர் பிரிட்ஜில் இயற்கையாகவே வானவில் தோன்றியிருக்கிறது.

அதைப் பார்த்த கமல் உடனே அதை தத்ரூபமாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் அதை செய்து முடிப்பதற்குள்ளாகவே வானவில் மறைந்து போயிருக்கிறது. ஏனென்றால் அந்த நேரத்தில் கேமராமேன், கேமரா எதுவும் இல்லையாம். இதனால் அவருடைய ஆசை நிராசையாகி போய் இருக்கிறது.

அந்தக் கடுப்பில் கமல் அப்போது உதவி இயக்குனராக அங்கு இருந்த சேரனை கூப்பிட்டு கண்டபடி திட்டி தீர்த்திருக்கிறார். இதனால் அரண்டு போன சேரன் இனி கமல் நடிக்கும் எந்த படத்திலும் நான் இணைய மாட்டேன் என்று தெறித்து ஓடி இருக்கிறார். அதன் பிறகு அவர் கமலுடன் எந்த படத்திலும் பணிபுரியவில்லை. பல வருடங்கள் கழித்து தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமலிடம் நிறைய விஷயங்களை பேசினார்.

அது மட்டுமல்லாமல் உங்களுக்காக தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாக கதையை நான் கூறுவேன் என்றும் அவர் கமலிடம் தெரிவித்தார். இந்நிலையில் சேரன் இப்போது அந்த விஷயத்தை வெளிப்படையாக கூறி அப்போது கமல் பேசியது மிகவும் சரிதான் என்றும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் அந்த அளவுக்கு கமலின் சினிமா நுணுக்கம் இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் இன்று ஒரு வெற்றி நாயகனாக இருக்கிறார் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.