ரஜினி-கமல் காம்போவில் வந்த 16 படங்களின் மொத்த லிஸ்ட்.. எல்லா மொழியிலும் கலக்கிய ஜாம்பவான்கள்

தமிழ் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் கமல், ரஜினி இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு காலகட்டத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதை விட்டு விட்டனர். ஏனென்றால் இரண்டு பேருக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

அந்த வகையில் தனித்தனியாக நடித்தால் மார்க்கெட் மற்றும் சம்பளமும் உயரும். அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வரும் என்ற எண்ணத்தில் அவர்கள் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். இப்போதும் கூட அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஆனாலும் இவர்களின் காம்போவை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து 16 படங்கள் வரை நடித்திருக்கிறார்கள். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் கலக்கி இருக்கிறார்கள்.

மேலும் தமிழில் 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், நட்சத்திரம், ஆடுபுலி ஆட்டம், தப்பு தாளங்கள், அக்னி சாட்சி, தாயில்லாமல் நானில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.

அதில் தில்லுமுல்லு திரைப்படத்தில் கமல் ரஜினிக்காக ஒரு கெஸ்ட் ரோலும் செய்திருந்தார். இப்படி அதிகபட்ச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் இவர்களின் நட்பு ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்ததோ இப்பவும் அப்படித்தான் இருக்கிறது.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் பொன்னியின் செல்வன் பட விழாவில் இவர்கள் இருவரும் இணைந்து கலந்து கொண்டதை சொல்லலாம். அப்போது ரஜினி கமல் இருவரும் கைகளை கோர்த்து பிடித்தபடி மேடை ஏறி பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி, தளபதி பட சூட்டிங்கில் தனக்கு இருந்த அசௌகரியத்தை பற்றியும் கமல் அதற்காக கொடுத்த ஐடியா பற்றியும் வெளிப்படையாக கூறியிருந்தார். இதுவே இவர்களுக்கான நட்பின் ஆழத்தை தெளிவாக காட்டுகிறது.