பொதுவாக டாப் நடிகர்கள் என்ற அந்தஸ்தை பெற்றவுடன் ஹீரோக்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பார்கள். அப்படிதான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோரின் படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒன்று என்று வெளியாகி வருகிறது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும் இப்போது வரை எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் 2000 இருந்து 2022 வரை ரஜினி எத்தனை ஹிட் மற்றும் பிளாப் படம் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரிப்போர்ட் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவது கடந்த 22 வருடங்களில் ரஜினி மொத்தமாக 13 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதில் வெறும் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதாவது ரஜினியின் சந்திரமுகி அவரின் கேரியரில் அதிக நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதே கூட்டணியில் 2010 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான கூட்டணியில் உருவான எந்திரன் படமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
மேலும் தமிழை தாண்டி எல்லா மொழிகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. கடைசியாக ரஜினிக்கு ஹிட் படம் கொடுத்தது பேட்ட. இப்படி கடந்த 22 வருடங்களில் சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், பேட்ட படங்கள் மட்டுமே வெற்றியை தழுவி உள்ளது. மீதம் உள்ள ஒன்பது படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது.
அதாவது ரஜினியின் படங்கள் எப்போதுமே அவரது ரசிகர்களுக்காகவே வசூல் செய்துவிடும். ஆனால் விமர்சன ரீதியாக சில படங்கள் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அந்த வகையில் பாபா, குசேலன், கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா, 2.0, தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் தோல்வியை சந்தித்தது.
ஆனாலும் 22 வருடங்களில் 4 ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்தாலும் தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை ரஜினி தக்க வைத்துள்ளார். மேலும் ஜெயிலர் படத்தில் தற்போது ரஜினி நடித்து வருவதால் இந்த படம் ஹிட் லிஸ்டில் சேருமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.