ஏவிஎம் மியூசியத்தில் கெத்தாக நிற்கும் ரஜினி சிலை.. வருகை தந்து சிறப்பித்த கமல்

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. 78 ஆண்டுகளாக தனித்து நிற்கும் இந்த நிறுவனம் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல தரமான சீரியல்களையும் தயாரித்து இருக்கிறது. அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு என தனி மரியாதையும் உள்ளது.

இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் தற்போது தங்கள் ஸ்டுடியோவின் படப்பிடிப்பு தளத்தை அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறது. ஒரு பகுதியை மட்டும் இதற்காக ஒதுக்கி இருக்கும் நிறுவனம் அதற்கு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என பெயரும் வைத்திருக்கிறது. இதை சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அதை தொடர்ந்து வைரமுத்து, சிவகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அந்த அருங்காட்சியகத்தில் நம்மை வியக்க வைக்கும் பல விஷயங்களும் இடம்பெற்று இருக்கிறது.

கெத்தாக நிற்கும் ரஜினி சிலை

rajini-statue
rajini-statue

அது மட்டுமல்லாமல் 78 ஆண்டுகளாக ஏவிஎம் தயாரித்த படங்களில் சிறப்பாக பார்க்கப்பட்ட அத்தனை விஷயங்களும் அந்த மியூசியத்தில் இருக்கிறது. உதாரணத்திற்கு ஓவியங்கள், பிரிட்டிஷ் கால கார்கள், படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஆரம்ப காலத்தில் இருந்த புகைப்பட சாதனங்கள் என ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைத்திருக்கிறது.

அதில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் தான் சூப்பர் ஸ்டாரின் உருவ சிலை. சிவாஜி திரைப்படத்தில் வரும் அந்த சிலையின் முன்பாக பலரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். மேலும் பாயும் புலி திரைப்படத்தில் ரஜினி பயன்படுத்திய பைக்கும் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த பைக் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

ரஜினி பயன்படுத்திய பைக்

rajini-payumpuli-bike
rajini-payumpuli-bike

வெறும் போஸ்டரில் மட்டுமே பார்த்த அந்த பைக்கை ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்து செல்பியும் எடுத்து வருகின்றனர். இப்படி பல பொக்கிஷங்களை ரசிகர்களின் பார்வைக்கு வைத்திருக்கும் ஏவிஎம் நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இது அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.