Vijayakanth: தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமானார். கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் அவருடைய மரணத்திற்கு இப்போது பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நேரில் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.r ஆனால் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தின் காரணமாக அந்த இடமே ஸ்தம்பித்தது. அதை தொடர்ந்து இன்று தீவு திடலுக்கு அவருடைய உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
அதைத்தொடர்ந்து ரஜினி, கமல், குஷ்பூ, ராதாரவி என பிரபலங்கள் பலரும் கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று விஜய், லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான் உட்பட பல பிரபலங்களும் கேப்டனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
அதில் அஜித் எப்பொழுது வருவார் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அவர் தொலைபேசி வாயிலாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக துபாயில் இருக்கும் அவர் கேப்டனின் மனைவி பிரேமலதாவுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் வர முடியவில்லை. கேப்டனின் மறைவு தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடமும் பேசி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் அவர் நேரில் வராதது சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.