Angammal: அங்கம்மாள் என்ற தமிழ் திரைப்படம் மும்பை பட விழாவில் ஒளிபரப்ப தேர்வாகியுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இதை தாண்டி தற்போது மும்பை சினிமாவை சேர்ந்த சில சினிமா விமர்சகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள் என இந்திய ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் அளவுக்கு இந்த படம் வட மாநிலத்தவர்களை கவர்ந்திருப்பது தான் பெரிய ஆச்சரியம்.
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை தான் கோடி துணி. இந்த கதையை தான் அங்கம்மாள் என்னும் படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
கோடித்துணியிலிருந்து உருவான அங்கம்மாள்!
இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி விபின் சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். 90களில் காலகட்டத்தில் ஒரு கிராமமே பார்த்து மிரண்டு போகும் அளவுக்கான பெண்ணாக இருக்கிறார் அங்கம்மாள். அவருடைய ஒரே மகன் சென்னையில் படித்ததோடு ரொம்பவும் மாடர்னாக யோசிக்கும் ஆளாக இருக்கிறார்.
ரவிக்கை அணியும் பழக்கமில்லாத அங்கம்மாளுக்கும், அதை மாற்ற வேண்டும் என நினைக்கும் அவருடைய மகனுக்கும் இடையே நடக்கும் எதார்த்த கதைகளம் தான் இந்த படம். அம்மாவை மாற்ற நினைக்கும் பொழுது ஒரு எளிய பிரச்சனை கட்டுப்பாட்டை மீறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
தெரிந்தவை, தெரியாதவை, விரும்புபவை, விரும்பத் தகாதவை என சின்ன சின்ன கருத்து முரண்பாடுகளை நகைச்சுவை உணர்வோடு இந்த கதையின் ஆசிரியர் எழுதியிருப்பார். அதை அப்படியே திரைப்படமாக எடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
தென்னாட்டு பக்கம் கோடி துணி என்ற வார்த்தை இன்று வரை அதிக புழக்கத்தில் இருக்கிறது. புது துணியை கோடி துணியை என்று சொல்வார்கள். அதே போன்று ஒரு பெண் இறந்த பிறகு அவருடைய தாய் வீட்டில் இருந்து புதிதாக வாங்கி வந்து அந்தப் பெண்ணின் உடல் மீது போடப்படும் துணியையும் கோடி துணி என்று சொல்வார்கள். இந்த கதைக்கே பெருமாள் முருகன் கோடி துணி என பெயர் வைத்திருப்பதால் இந்த கதையின் முடிவில் கண்டிப்பாக ஏதாவது ஒரு அழுத்தமான காட்சிகள் இருக்கும்.