வழக்கமான படமாக இல்லாமல் பீரியட் படம், நவீன காலத்தில் கதை இதெல்லாம் ஒரு கதைக்குள் கொண்டு வருவது சிக்கலான விஷயம். ஹாலிவுட்டில் அப்படி படம் எடுக்கிறார்கள் என்றால், அங்கு பல நூறு கோடி கொட்டி படமெடுக்கிறார்கள். அதனால் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் கலெக்சன் அள்ளும். ஆனால், தமிழில் அப்படியில்லை.
ஆனாலும், கங்குவா அந்தக் குறைகளை எல்லாம் நிவர்த்தி ஆக்கும் என கருதப்பட்து. அதன்படி நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் கங்குவா. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளில் உலகம் முழுவதம் 45 கோடி முதல் 50 கோடி வசூலாகியுள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் 22 கோடி வசூல் செய்துள்ளது.
சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட் செலவில் உருவான இப்படம் அதிக மொழிகளில், 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் உருவாகத்திற்கு 2 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். விமர்சன ரீதியாக சில குறைகள் இருந்தாலும் தமிழில் இப்படி ஒரு பிரமாண்ட படமெடுத்ததை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
அமரன் பட முதல் நாள் வசூலை முறியடித்த கங்குவா
இந்த நிலையில் தீபாவளிக்கு ரிலீஸான சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலை கங்குவா முறியடித்துள்ளது. அதாவது அமரன் படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகி இந்திய அளவில் ரூ.21.4 கோடி வசூலித்த நிலையில், அதைக்காட்டிலும் கங்குவா கூடுதலாக வசூலித்து மொத்தம் 22 கோடி வசூலித்துள்ளது.
அமரன் படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவில் ரூ.300 கோடி கிளப்பில் இணையுமா என கேள்வி எழுந்த நிலையில் கங்குவா அதை முறியடித்து, வசூலை தன் பக்கம் திருப்பும் என கூறப்பட்டது. அதன்படி, இன்று வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கங்குவா படத்துக்கு மேலும் வசூல் அதிகரித்து ரூ.100 கிளப்பில் அடுத்த சில நாட்களில் இணையும் அடுத்த வாரத்தில் அமரன் வசூலை அசால்ட்டாக முறியடித்து சூர்யாவின் கேரியரில் உச்ச வசூல் சாதனை செய்த படமாக அமையும் என கூறப்படுகிறது.
முதல்நாள் வசூலில் 3வது இடம் பிடித்த சூர்யா
தமிழ்நாட்டில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் விஜயின் தி கோட் 39.15 கோடியும், ரஜினியின் வேட்டையன் 27.75 கோடியும் வசூலித்த நிலையில், சூர்யாவின் கங்குவா 22 கோடி வசூலித்து 3வது இடத்திலும், சிவகார்த்திகேயனின் அமரன் 16.05 கோடி வசூலித்து 4 வது இடத்திலும், இந்தியன் 16.5 கோடியும், தங்கலான் 12.4 கோடியும், ராயன் 1185 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமரன் பட முதல் நாள் வசூலை ஓவர் டேக் செய்தால் விரைவில் அதன் மொத்த வசூலை கங்குவா முறியடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.