அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் சலசலப்பு! களமிறங்கிய டி.ராஜேந்தர்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் பணிகள் தற்போது முடங்கியுள்ளன. நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் ஒரு பணத் தகராறு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே இதற்கு காரணம். இந்த விவகாரத்தில் பெப்சி (FEFSI) தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டுள்ளதால், படப்பிடிப்புத் தளத்தில் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஐசரி கணேஷின் தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக 5 கோடி சிம்பு பெற்றுக்கொண்ட நிலையில், அந்த திட்டம் தொடங்கப்படாமல் காலம் தாழ்ந்தது. இதற்கு சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் எனத் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தைச் சுமுகமாக முடிக்க பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து, சிம்புவின் ‘அரசன்’ படத்திற்குத் தங்கள் ஒத்துழைப்பைத் திரும்பப் பெற்றுள்ளன. தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாததால், மிகப்பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் தற்போது பாதியிலேயே நிற்கிறது.

தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்துப் பேசிய நடிகர் டி.ராஜேந்தர், “அரசன் படப்பிடிப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டது யார்?” என ஆவேசமாக கேட்டார். நான் இங்கு ஒரு தந்தையாகவோ அல்லது சிம்புவுக்காகவோ வரவில்லை. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் இணைந்து நடத்தும் இந்த அநீதியைச் சுட்டிக்காட்டவே வந்துள்ளேன் என்று தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் சிம்புவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளதாக டி.ராஜேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட முன்பணம் சட்டப்பூர்வமாகச் சிம்புவையே சாரும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பை மீறி சங்கங்கள் செயல்படுவது சட்டவிரோதமானது என்று கூறினார்.

தேர்தல் நடக்கும் இக்காலகட்டத்தில், நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு படப்பிடிப்பை நிறுத்துவது முறையற்ற செயல் என டி.ராஜேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிட்டு தனது மகனுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும், இது குறித்து விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →