சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

புதிய பாதை 2 படத்தில் பிரபல நடிகர்.. பார்த்திபன் போட்ட ஸ்கெட்ச்

பார்த்திபன் இயக்கத்தில் 1989இல் பார்த்திபன், சீதா, மனோரமா, நாசர் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் புதிய பாதை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் பார்த்திபனுக்கும் இந்த படம் ஒரு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

ஏனென்றால் இந்த படத்தின் மூலம் பார்த்திபனுக்கு தொடர் படவாய்ப்புகளும் வரத்தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் கதாநாயகி சீதாவை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புதிய பாதை படத்தின் கதையில் பெண்ணை பாலியல் வன்முறை செய்தவனை கணவனாக ஏற்றுக் கொள்வது சரியா என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.

ஆனாலும் அந்த காலகட்டத்திலேயே படத்தின் மேக்கிங் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், ஹவுஸ்ஃபுல் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் ஒத்த செருப்பு படம் வெளியானது.

இதை தொடர்ந்து சிங்கிள் சாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கின்னஸ் சாதனைக்காக எடுத்துள்ள இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக பார்த்திபன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அதில் தன்னுடைய முதல் படமான புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார். தயாரிப்பாளர் தாணுவிடம் இப்படத்தின் கதையை மாற்றம் செய்து சொன்னேன், கதையை கேட்ட அவர் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நக்கலும், நையாண்டியும் உள்ள ஹீரோ வேண்டும்.

இதனால் இந்த படத்தில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகயுள்ளது. முதல் முறையாக சிம்பு மற்றும் பார்த்திபன் காம்போவில் புதிய பாதை படம் உருவாக்கப் போகிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News