சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நாகேஷின் மறக்க முடியாத 6 கேரக்டர் ரோல்.. தருமி கதாபாத்திரத்தில் வாழ்ந்த நடிப்பு ராட்சசன்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரான நாகேஷ் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த மறக்கமுடியாத 6 கதாபாத்திரங்கள் இன்றுவரை ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

1965 ஆம் வருடம் வெளியான சிவாஜி நடிப்பில் ஏபி நாகராஜன் இயக்கிய திருவிளையாடல் திரைப்படமானது, அந்தக் காலத்தில் வெளிவந்த எத்தனையோ பக்தி படங்களை தூக்கி சாப்பிட்டு விட்டு மக்களின் நெஞ்சத்தை கவர்ந்து மாயாஜாலம் புரிந்தது. இதில் நடிகர் நாகேஷ், தருமி என்கின்ற ஒரு ஏழை புலவனாக நடித்து தன்னுடைய குறும்பு கலந்த நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படத்திற்காக இவர் வெறும் ஒன்றரை நாள் மட்டுமே கால்சீட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அதே இயக்குனர் இயக்கி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் தனது நக்கல் கலந்த பேச்சின் மூலம் நகைச்சுவை கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவ்வாறு இவர் பெரும்பாலும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் போது அவர்களுக்கு நிகராக நாகேஷ்சை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

அதே ஆண்டு டிவி ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி, ஜெயலலிதா நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் நாகேஷ் செய்த அட்டூழியத்திற்கு அளவே இல்லை. ஏனென்றால் இதில் நான்கு பெண்களைப் பெற்ற தந்தை, தன் பெண்களுக்கு வரன் பார்க்க வேண்டும் என்றபோது, இரண்டாவது பெண் காதலித்து ஓட, முதல் பெண் ஆண்களை வெறுப்பவராகவும், மூன்றாவது பெண் இசைப் பைத்தியமாகவும் இருக்க, நான்காவது பெண் சினிமா பைத்தியமாக இருப்பதால் அவர்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேலை இரண்டாவது பெண்ணின் காதலனான கதாநாயகன் சிவாஜி ஏற்று அவருடன் தோழனாக சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்து அதில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்யும் கலாட்டா கல்யாணத்தில் நாகேஷின் நகைச்சுவை படத்தைப் பார்த்தவர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

அதேபோன்று இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1967ல் வெளிவந்த பாமா விஜயம் திரைப்படத்தில் ஆர் முத்துராமன் கதாநாயகனாக இருந்தாலும் நாகேஷ் நகைச்சுவை நாயகனாக கிருஷ்ணா கதாபாத்திரத்தில் ரசிகர்களை குதூகலப் படுத்தி இருப்பார்.

இவ்வாறு 90-ல் கமல் நான்கு வேடங்களில் கதாநாயகனாக நடித்த மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் கமலுக்கு ஈடு கொடுத்து சீனியர் நடிகராக அவினாசி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

அவ்வாறே சர்வர் சுந்தரம் என்ற படத்தில் முத்துராமன் மற்றும் நாகேஷ் இருவரும் கதாநாயகர்களாக ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு நடிப்பை வெளிக் காட்டினாலும், நாகேஷ் நடித்த சுந்தரம் கதாபாத்திரத்தில் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இவ்வாறு நகைச்சுவை பேச்சால் மட்டுமல்லாமல் தன்னுடைய உடல் பாவனைகளாலே மக்களை சிரிக்க வைத்து சினிமாவில் மறக்கமுடியாத நகைச்சுவை நடிகராக கால் பதித்த நாகேஷ் இன்றும் சினிமா பிரியர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

Trending News