வசூல் வேட்டையில் அதிர வைத்த சூப்பர் ஸ்டார்.. அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தது. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருந்தார்.

முழுக்க முழுக்க அண்ணன், தங்கை சென்டிமென்டை வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பாண்டியராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மழையின் பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் இந்த படத்தை காண்பதற்காக ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். மேலும் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக உருவாகி இருந்த இப்படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல வசூலைப் பெற்றது.

ஆனாலும் அந்த சமயத்தில் அண்ணாத்த திரைப்படம் ஒரு தோல்விப்படம் என்று கூறப்பட்டு வந்தது. அதனால்nபடத்தைப் பற்றிய பல கலவையான விமர்சனங்களும் அப்போது எழுந்தது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் படத்தின் வசூல் என்ன என்பதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் வசூல் பற்றிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் இந்த திரைப்படம் இந்திய அளவில் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் உலக அளவில் 220 கோடி ரூபாயை அண்ணாத்த திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த செய்தியால் தற்போது ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஆதாரம்னா இப்படித்தான் இருக்கணும் என்று அவர்கள் இந்த தகவலை சோசியல் மீடியாவில் டிரண்ட் செய்து வருகின்றனர்.