கோலிவுட்டில் தனது இயல்பான நடிப்பாலும்,கேரக்டர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி.வித்தியாசமான சப்ஜெக்ட்ஸ் மற்றும் அழுத்தமான கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் இவர், தனது சினிமா பயணம் மற்றும் படப்பிடிப்பில் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான’அயோத்தி’படம் ப்ரீத்தி அஸ்ரானியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
இப்படத்தில் சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில்,ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து,ரத்னகுமார் இயக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான ‘விக்ரம் 56’படத்தில் விதுவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி என்ற விஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல், மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘கொலைகாரன்’ திரைப்படத்தில்,ஊட்டியில் உள்ள கான்வென்ட் பள்ளி ஆசிரியையாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.இதற்கிடையே,’அயோத்தி’படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தனக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தாலும்,இப்படத்திற்காகத் தமிழ் தெரியாதவர் போல் நடிக்குமாறு இயக்குநர் ஆர்.மந்திரமூர்த்தி கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும்,தற்போது தான் சரளமாகத் தமிழ் பேசுவதைக் கண்டு பலரும் ஆச்சரியப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




