இந்தியாவில் சொகுசு கார்களை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி,2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆடி நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் விலையும் அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து பேசிய ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் பல்பீர் சிங் தில்லான்,அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைச் சமாளிக்க விலை உயர்வு அவசியமாகியுள்ளது என்றும்,வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இந்த உயர்வு அளவோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு ஆடியின் சொகுசு செடான் மற்றும் எஸ்யூவி வகை கார்களுக்குப் பொருந்தும். குறிப்பாக Q3,Q5,Q7,Q8 போன்ற எஸ்யூவி மாடல்களும்,A4,A6 போன்ற செடான் கார்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.மேலும்,நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட மாடல்களான SQ8 மற்றும் RS Q8 கார்களும் விலை மாற்றத்திற்கு உட்படும்.
ஏற்கனவே 2026 ஏப்ரல் 1ஆம் தேதி ஆடி நிறுவனம் தனது கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது.தற்போது மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால்,இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஆடி கார்கள் விலை உயர்கின்றன.புதிய விலைகள் மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து மாறுபடும்.இதற்கான முழுமையான விலைப் பட்டியல் 2027 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




