டி. ராஜேந்தருக்குப் பிறகு சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் நாயகனாக பல துறைகளை ஒரே ஆளாக ‘வியாழன் வெள்ளி சனி’ படத்தின் படைப்பாளி கே. பாபு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் கதைக்களத்திற்காக இயக்குநர் கே. பாபு எடுத்த முயற்சிகள் சாதாரணமானவை அல்ல. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இந்தியாவில் உள்ள பல அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு நேரில் சென்று, கடுமையான சூழல்களுக்கு நடுவே படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டிற்குச் சென்று, அங்குள்ள நிஜ சிங்கத்துடன் சுமார் இரண்டு மாத காலம் ஒரே இடத்தில் தங்கி, அதனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர் அந்தச் சிங்கத்துடன் இணைந்து ஆபத்தான பல காட்சிகளில் நேரடியாக நடித்தும் அசத்தியுள்ளார்.
இத்திரைப்படம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், அக்காலகட்டத்தை அப்படியே கண்முன்னே கொண்டுவரப் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஆதிமனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களின் உடைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் பிரம்மாண்ட பொம்மை உருவங்களை அவரே வடிவமைத்துள்ளார்.
பழங்கால மனிதர்களின் வாழ்வியலையும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் நுட்பமாகவும் தத்ரூபமாகவும் செதுக்கியுள்ளார். இந்தத் படத்தின் மிக முக்கியமான மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதன் கூர்மையான வசனங்களுக்குத் தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட விமர்சகரான ‘ப்ளூசட்டை மாறன்’ குரல் கொடுத்துள்ளார்.




