தெலுங்கு திரையுலகில் மாஸ் ஆக்ஷன் படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் போயபாட்டி ஸ்ரீனு,ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இவர்களது கூட்டணியில் வெளியான ‘சரியானோடு’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் வெற்றிபெற்றது.தற்போது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறை வழக்கமான மாஸ் ஆக்ஷன் கதையைத் தவிர்த்து,புராணக் கதைக்களத்தை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான படத்தை உருவாக்க போயபாட்டி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அவர் சொன்ன கதையின் மையக்கரு அல்லு அர்ஜுனுக்குப் பிடித்திருந்ததாகவும், அதனை முழுமையான ஸ்கிரீன்ப்ளே ஆக உருவாக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பாக,இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு முன்னால் மிகப்பெரிய கால அவகாசம் இருப்பதாகத் தெரிகிறது.தற்போது அல்லு அர்ஜுன்,அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘ராக்கா’படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.மேலும்,இயக்குநர் பாசில் ஜோசப்புடனான படம் குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் போயபாட்டி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.அதுவரை காத்திருக்காமல் வேறு ஒரு முன்னணி நடிகரை வைத்து படத்தை இயக்குவாரா ?அல்லது இந்தக் கதைக்காகக் காத்திருப்பாரா ?என்பதுதான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.




