தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ் டக்குபட்டி. பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இவர், நடிப்பைத் தாண்டி ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில், தனது வாழ்க்கையில் திருவண்ணாமலை ஏற்படுத்திய மாற்றம் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் தற்போது கவனம் பெற்று வருகிறது.
ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மனதளவில் ஒருவிதமான அமைதியின்மையை வெங்கடேஷ் உணர்ந்துள்ளார். எவ்வளவோ இடங்களுக்குச் சென்றும், பலரைச் சந்தித்தும் தனக்குள் இருந்த கேள்விகளுக்கும் மனக்குழப்பத்திற்கும் அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சூழலில்தான் திருவண்ணாமலை அருணாசலத்தை நாடியுள்ளார்.
அங்கு ரமணாஸ்ரமம் மற்றும் ஸ்கந்தாஸ்ரமம் சென்ற அவர், தியானத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, ஸ்கந்தாஸ்ரமத்தில் தியானம் செய்தபோது தன்னுள் ஏதோ ஒரு புதிய சக்தி புகுந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அனுபவம் தனக்கு இதுவரை கிடைக்காத மன அமைதியைக் கொடுத்ததாகவும், அதன் பிறகு வாழ்க்கையில் ஏற்படும் விஷயங்கள் தன்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீ ரமண மகரிஷி மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களின் கருத்துகளும் தனது சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் ஏற்கெனவே பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.வெள்ளித்திரையில் பல வெற்றிகளைக் கண்ட ஒரு நடிகருக்குக் கூட மன அமைதியைத் தேடி அலைய வேண்டிய சூழல் இருந்திருக்கிறது என்பதுதான் இந்த அனுபவத்தின் மூலம் தெரியவருகிறது. வெங்கடேஷின் இந்த ஆன்மிகப் பயணம் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.




