Vijay: தனக்காக எழுதப்பட்ட கதைகளில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் நடித்து அந்தப் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து அவர்களுடைய சினிமா கேரியரையே தூக்கிவிட்டது பற்றி நடிகர் சரவணன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
90களில் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் முரளியுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தவர் சரவணன். 90களில் இறுதியில் இவரது படங்கள் சந்தித்த தொடர் தோல்வியால் சினிமாவுக்கு ஒரு பெரிய பிரேக் எடுத்திருந்தார்.
சித்தப்புவின் ஓப்பன் டாக்
அதன் பின்னர் இவரை பருத்திவீரன் படம் தான் சித்தப்புவாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே கொண்டு வந்து சேர்த்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் சரவணன் இடம் அவர் பண்ணிய படங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய சரவணன் அஜித்தின் சினிமா கேரியரை புரட்டி போட்ட காதல் கோட்டை திரைப்படத்தை அகத்தியன் முதலில் தனக்காக கொண்டு வந்ததாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் படத்தின் முதல் காட்சியே ரயிலில் எடுக்க வேண்டி இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் அதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். இவர்கள் சந்தித்த தயாரிப்பாளர்கள் யாரும் ஒரு காட்சிக்கு அவ்வளவு செலவு செய்ய முன் வராததால் அப்போது அந்த கதை கைவிடப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
அதே மாதிரி இயக்குனர் மற்றும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் நாளைய தீர்ப்பு கதையை சரவணனுக்காக எழுதி இருக்கிறார். அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகை கூட கொடுக்கப்பட்டிருக்கிறது.
சரவணன் கொடுத்த கால்ஷீட்டில் அந்த வருடம் பெரிய அளவில் மழை வந்ததாம். அப்போது படப்பிடிப்பு பற்றி எந்த தகவலும் சரவணனுக்கு வரவில்லையாம். அதன் பின்னர் சரவணன் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சந்திரசேகர் இவரிடம் அணுகி இருக்கிறார்.
கால்ஷீட் இல்லாத காரணத்தால் சரவணன் நாளைய தீர்ப்பு படத்திலிருந்து விலகி இருக்கிறார். சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் தான் சினிமாவில் அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது என்பதை சரவணனின் பேட்டி உறுதி செய்திருக்கிறது.