பாரதிராஜாவால் திரும்ப எடுக்க முடியாத 6 படங்கள்.. ரஜினியே மறக்க முடியாத பரட்டை-சப்பாணி காம்போ

இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஒரு நான்கு சுவருக்குள் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு அவுட்டோர் படப்பிடிப்பை அறிமுகப்படுத்தியவர். இவருடைய இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே சிறந்தவைகள் தான். அதிலும் இந்த ஆறு படங்கள் அவரே நினைத்தாலும் திரும்ப இயக்க முடியாத அளவிற்கு சிறப்பாக இருக்கும் படங்கள்.

சிகப்பு ரோஜாக்கள்: சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் பாரதிராஜா பாணியிலிருந்து சற்றே மாறுபட்ட ஒன்று. அந்தக் காலத்தில் காதல் இளவரசனாக சுற்றிக் கொண்டிருந்த கமலஹாசனை ஒரு சாடிஸ்டாக காட்டிய திரைப்படம் இது . அடுத்தடுத்து என்ன என்று படம் முழுக்க விறுவிறுப்போடு செல்லும் காட்சிகளை அமைத்திருப்பார் பாரதிராஜா.

16 வயதினிலே: பாரதிராஜா என்ற ஒரு இயக்குனரை தமிழ் சினிமாவிற்கே அடையாளம் காட்டிய திரைப்படம் தான் 16 வயதினிலே. ரஜினிக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்த கதாபாத்திரம் தான் பரட்டை. இன்று வரை இந்த பெயர் அவருக்கு நிலைத்து இருக்கிறது. சப்பணியாக கமலும் போட்டி போட்டு நடித்திருப்பார். இனி ரஜினியே நினைத்தாலும் பரட்டை மாதிரி நடிக்க முடியாது.

அலைகள் ஓய்வதில்லை: நவரச நாயகன் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை. பாரதிராஜா இதில் எடுத்த மற்றுமொரு புதிய முயற்சி என்னவென்றால் அந்தக் காலத்தில் கவர்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்ட சில்க் சுமிதாவை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்தி ஜெயித்திருப்பார்.

முதல் மரியாதை: யாராலும் இப்படி ஒரு காதல் கதையை யோசித்து விடவே முடியாது. நடுத்தர வயதில் இருக்கும் ஒரு ஆணுக்கும், இளம் வயதில் இருக்கும் பெண்ணுக்குமான வயது தாண்டிய காதலை எந்த இடத்திலும் தவறாக காட்டாமல் கண்ணியமாக காட்டியிருப்பார் பாரதிராஜா. இந்தப் படத்தில் நடிகை வடிவுக்கரசியின் நடிப்பை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

கிழக்கு சீமையிலே: சிவாஜி கணேசன், பத்மினி நடித்த பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு ஒரு அண்ணன் தங்கைக்கு உள்ளான உறவை இவ்வளவு நுணுக்கமாக காட்ட முடியும் என்றால் அது பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படம் தான். தென் மாவட்டங்களில் தாய்மாமன் என்ற உறவுக்கு இருக்கும் உரிமையை அழகாக சொல்லி இருப்பார் பாரதிராஜா.

மண்வாசனை: நடிகை ரேவதி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவர் நடித்த அத்தனை கேரக்டர்களுமே இன்றளவும் பேசப்படும் ஒன்று. அதிலும் பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் ‘பேச்சி’ கதாபாத்திரம் ரேவதியின் நடிப்புக்கு கிடைத்த மணிமகுடம் என்றே சொல்லலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →