தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் மூலம் சமூக பிரச்சினைகளை வலுவாக எடுத்துரைத்தவர். சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
“நான் திறமையான நடிகர்களை பயன்படுத்தி இருக்கேன். அதே மாதிரி சிலரை மிஸ் பண்ணியும் இருக்கேன். அதுல மிஸ் ஆனவர் தான் சிவகார்த்திகேயன். அவரை வழக்கு எண் 18/9 படத்துல நடிக்க வைக்கலாம் என இருந்தேன், ஆனா முடியல” என்று பாலாஜி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 தமிழ்த் திரைப்படம் ஆகும். இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். இந்த படம் சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூக அநீதிகளை சுட்டிக்காட்டிய சஸ்பென்ஸ் நிறைந்த கதையாக இருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தால், அவரது கேரியர் இன்னொரு பக்கமாக மாறியிருக்கும் என்பதே சினிமா வட்டாரத்தின் கருத்து.
சிவகார்த்திகேயன் 2012-ல் மெரினா மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்குப் பிறகு மான் கராத்தே, ரெமோ, டாக்டர், டான் போன்ற படங்கள் மூலம் நகைச்சுவையும் உணர்வுகளையும் சமநிலைப்படுத்தும் நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இன்று அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
பாலாஜி சக்திவேல் பேட்டியில் கூறிய இந்த வருத்தம், ரசிகர்களுக்கு “என்ன ஆகி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வழக்கு எண் 18/9 படத்தில் சிவா நடித்திருந்தால், அந்த படத்தின் தாக்கம் இன்னும் அதிகரித்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், சிவா தனது சொந்த பாதையில் முன்னேறி இன்று தனக்கென பெரிய இடத்தை பிடித்திருப்பதும் உண்மைதான்.
இந்தச் செய்தி வெளிவந்ததும், சமூக வலைதளங்களில் #Sivakarthikeyan, #Vazhakku Enn18-9, #Balaji Sakthivel போன்ற ஹாஷ்டாக்கள் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்கள் “சிவா அந்த ரோலில் சூப்பராக இருந்திருப்பார்” என பகிர்ந்து வருகின்றனர்.