ரஜினி, விஜய் வெற்றி பெற்றால் தான் இருக்க முடியும்.. ஆனா கமல் அப்படி இல்லை, சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் விஜய். தமிழ் சினிமாவின் மொத்த பொருளாதாரமும் இவர்கள் படங்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களை பற்றி பிரபல இயக்குனர் ஒருவர் பேசிய சர்ச்சை கருத்து ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள். அதே போன்று தான் தளபதி விஜய். கிட்டத்தட்ட 90களில் ஆரம்பித்த இவருடைய திரை பயணம் இன்று வரை உச்சத்தில் தான் இருக்கிறது. இவர் இன்றைய கோலிவுட்டின் வசூல் மன்னனாக இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல இயக்குனர் அமீர் இவர்கள் மூவரை பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அமீரை பொறுத்த வரைக்கும் அவருக்கு ரஜினிகாந்தை ரொம்பவும் பிடிக்கும். மேலும் ரஜினி மட்டும் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை ஆணித்தரமாக சொல்லி வருகிறார். அதே நேரத்தில் ரஜினி செய்யும் தப்புகளையும் அவர் சுட்டிக் காட்ட தவறுவதில்லை.

தற்போது அந்த பேட்டியில் அமீர் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு வெற்றிப் படங்கள் மட்டுமே அடையாளம் என்றும் வெற்றிப்படங்கள் கொடுக்காவிட்டால் இவர்கள் இருவராலும் சினிமாவில் இருக்க முடியாது, ஆனால் உலகநாயகன் கமலஹாசனை பொறுத்த வரைக்கும் தோல்வி படங்கள் தான் அவருக்கான அடையாளம் என்றும் தோல்வி படம் கொடுத்தாலும் அவர் சினிமாவில் நிலைத்து நிற்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

கமலஹாசனின் நடிப்பில் வெளியாகி தோல்வி அடைந்த குணா, ஆளவந்தான், ஹே ராம், ராஜ பார்வை, மகாநதி போன்ற திரைப்படங்கள் இன்றும் அவருடைய அடையாளங்களாக இருக்கின்றன. இந்த படங்கள் வணிக ரீதியாக தோல்வியை தழுவி இருந்தாலும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களாகவே இவை பார்க்கப்படுகின்றன.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவருக்கும் அவர்களுடைய வெற்றி படங்கள்தான் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றன. ரஜினி என்றால் பாட்ஷா, படையப்பா, முத்து மற்றும் விஜய் என்றால் துப்பாக்கி, கில்லி போன்று இவர்கள் வசூல் சாதனை படைத்த படங்கள் மட்டும் தான் ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →