நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நடித்த திரைப்படம் தான் வாரிசு. இந்தப் படம் பொங்கல் ட்ரீட் ஆக நேற்று ரிலீஸ் ஆனது. கத்தி, துப்பாக்கி, மாஸ்டர், பிகில் போன்ற அதிரடி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு குடும்ப பின்னணி கதையில் நடித்திருக்கிறார்.
மேலும் எட்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தின் படத்துடன் இந்த படம் மோதி இருக்கிறது. இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்களை தவிர பார்வையாளர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றன. இருந்தாலும் குடும்ப திரைப்படம் என்பதால் பேமிலி ஆடியன்ஸ்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த படம் அப்பா, அம்மா, மூன்று மகன்கள் என்பதை மையப்படுத்தி வந்ததால் இதில் நடித்தவர்களும் கொஞ்சம் எண்ணிக்கை அதிகமானவர்களே. அதிகமான நடிகர்களை வைத்து படம் எடுப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இது போன்ற கதைகளை இயக்குனர்கள் கொஞ்சம் கவனமாகவே கையாள வேண்டும்.
வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி இதில் சொதப்பிவிட்டார் என்றே சொல்லலாம். சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, ஷ்யாம், கணேஷ் வெங்கடராமன் போன்ற நடிகர்களுக்கிடையே பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் இந்த படத்தில் நடித்திருந்தார். நடித்திருந்தார் என்பதை விட எந்த வசனமும் இல்லாமல் சும்மாவே பொம்மை போல் படம் முழுக்க இருந்தார்.
சம்யுக்தா மாடலாக இருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல பேரும், புகழும் கிடைத்தது. இயக்குனர் சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு மனைவியாக நடித்திருந்த இவர், கதைக்கே சம்மந்தம் இல்லாமல் படம் முழுக்க ஒரு டயலாக் கூட இல்லாமல் வந்திருப்பார்.
இவர் நிலைமையானது பரவாயில்லை. கோலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான குஷ்பு இந்த படத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய் கூட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது குஷ்புவை பற்றி பேசியிருந்தார். ஆனால் குஷ்பு நடித்த காட்சிகள் மொத்தமாகவே நீக்கப்பட்டு இருக்கின்றனர். குஷ்புவை பார்க்கும் போது சம்யுக்தாவின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்லலாம்.